திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கிரிப் பிராகார மண்டபப் பணிகள் தொடக்கம்!

”திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், விரைவில் கிரிப் பிராகார மண்டபம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கப்படும்” என தமிழக அறநிலைத்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா தெரிவித்துள்ளார்.

திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில். இக்கோயிலில், கடந்த டிசம்பர் 14-ம் தேதி, வள்ளி குகைக்கு எதிர்ப்பகுதியில் உள்ள கிரிவலப் பிராகாரத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்துவிழுந்தது. இதில், பேச்சியம்மாள் என்ற மோர் விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண் உயிரிழந்தார். நடந்துசென்றுகொண்டிருந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதனால், கிரிப் பிராகாரத்தில் பக்தர்கள் நடந்துசெல்ல தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, கிரிப் பிராகார மண்டபம் மற்றும் இப்பகுதியில் உள்ள சில கடைகளும் முழுமையாக அகற்றப்பட்டன. தற்போது, கிரிப் பிராகார மண்டபம் இல்லாமல், வெறிச்சோடிக் காணப்படுகிறது திருக்கோயில். கருங்கற்களால் புதிதாக பிராகார மண்டபம் அமைக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்து, சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், கோயில் உள் பிராகாரத்தில் மின்சாதன வசதி குறைபாடுகள், சுகாதார வசதிகள்குறித்து சுமார் 3 மணி நேரம் வரை ஆய்வுசெய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ திருக்கோயிலில் புதிய கிரிப் பிராகாரம் கட்டப்படும் என தமிழக முதல்வர் அறிவித்த திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். கோயில் கிரிப் பிராகாரம் கட்டுவது சம்பந்தமாக ஆய்வுசெய்தேன். கடலுக்கு அருகில் இக்கோயில் இருப்பதால் பொறியாளர்கள் குழு தரப்பில் ஆய்வுசெய்யப்பட உள்ளது. பின்னர், ஒப்புதல் கிடைத்தும் மண்டபம் கட்டும் பணிகளுக்காக,  டெண்டர் விடப்பட்டு, பணிகள் விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அனைத்தும் செய்யப்படும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!