வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (28/07/2018)

கடைசி தொடர்பு:21:00 (28/07/2018)

`கட்டியைக் கரு எனக் கூறி 8 மாதம் சிகிச்சை!’ - அரசு மருத்துவமனைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

வயிற்றில் வளர்ந்த கட்டியைக் கரு என்று கூறி 8 மாதங்கள் சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனையிடம் 5 லட்ச ரூபாய் இழப்பீடு கோரி பாதிக்கப்பட்ட பெண், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

நீதிமன்றம்

சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் அசினா பேகம். திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்கு பின்,  மாதவிடாய் நின்ற காரணத்தால் சென்னை திருவல்லிக்கேணி  கஸ்தூரி பாய் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பரிசோதனைக்குச் சென்றார். அசினாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கருவுற்றிருப்பதாகக் கூறினர். ஆறு ஆண்டுகளுக்கு பின் மகப்பேறு பாக்கியம் பெற்ற மகிழ்ச்சியில் திளைத்தார் அசினா பேகம். 2016 நவம்பர் 18ம் தேதி பிரசவ தேதி என மருத்துவர்கள் குறித்துக் கொடுக்க, குடும்பத்தினர் 2016 அக்டோபர் 16ல்  அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியைக் கோலாகலமாக நடத்தினர். ஆனால், மருத்துவர்கள் குறித்துக் கொடுத்த தேதியில் பிரசவ வலிக்கு பதில், அடி வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக, மருத்துவமனைக்குச் சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றில் கட்டி இருப்பதாகக் கூறியுள்ளனர். குடும்பத்துக்கு வாரிசு கிடைக்கப் போகிறது என மகிழ்ந்த குடும்பத்தினருக்கு, இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கருவுற்றிருப்பதாகக் கூறி எட்டு மாதங்களாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீதும், மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி அசீனா பேகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவ அறிக்கை குறித்து 2 வாரங்களில் விளக்கம் அளிக்க அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் ஒத்திவைத்தார்.