மதுரை விமானநிலையத்தில் நிர்மலா சீதாராமனைத் தவிர்த்த ஓ.பி.எஸ்!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரை விமான நிலையத்தில் இறங்குவதற்கு 10 நிமிடத்துக்கு முன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னைக்கு கிளம்பி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

நிர்மலா சீதாராமன்

மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரியில் நடைபெறும் இதயவியல் மருத்துவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள இன்று மாலை தனி விமானத்தில் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வருகை தந்தார். அவரை மாவட்ட ஆட்சியரும் பா.ஜ.க. நிர்வாகிகளும் வரவேற்றனர். செய்தியாளர்களிடம் பேசுவதை தவிர்த்து உடனே நிகழ்ச்சிக்கு அவர் சென்று விட்டார். இதய மருத்துவத்தில் நவீன முன்னேற்றங்களைப் பற்றியும் அவசர காலத்தில் மருத்துவர்களை அணுகுவதற்கு முன், இதய நோயாளிகளுக்கு முதலுதவி செய்து நாமே அதை எப்படி சரி செய்யலாம் என்பதை விளக்கிப் பேசினார்.

நிர்மலா சீதாராமன் மதுரைக்கு 3 மணிக்கு வருகை தந்தார். அதற்கு 10 நிமிடம் முன்பாக  துணை முதலமைச்சர். ஓ.பன்னீர்செல்வம் சென்னை கிளம்பிச் சென்றார். விமான நிலையத்தில் நிர்மலா சீதாராமனை வரவேற்க, கட்சியினர் காத்திருப்பதை விசாரித்தப்படியே உள்ளே சென்றார்.  டெல்லியில் சமீபத்தில் ஓ.பி.எஸ்ஸுக்குக் கசப்பான  சம்பவம் நிகழாமல் இருந்திருந்தால், காத்திருந்து நிர்மலா சீதாராமனை வரவேற்று இருப்பார் என்று சொல்லப்பட்டது. அதேபோல், உள்ளூர் அமைச்சர்களும் மத்திய அமைச்சரை வரவேற்க வரவில்லை. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!