விசாரணைக்காக போலீஸ் அழைத்துச் சென்ற மகனைத் தேடி கர்நாடகாவிலிருந்து கும்பகோணம் வந்த தாய்!

கர்நாடக மாநில போலீஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மகனைத் தேடி கும்பகோணத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு தாய் ஒருவர், தனது சகோதரருடன் வந்தார். அங்கு, தன் மகனை பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் அவர், பரிதவிப்புடன் திருச்சி மத்திய சிறைக்குத் தேடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாஸ்தி பகுதியைச்  சேர்ந்தவர் ஹைதர்கான். இவரது மனைவி நஸ்ரீன் இவர்களது மகன் சையதுசாவுல். இவரை சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக போலீஸார் விசாரனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு சையது சாவுல் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள மாஸ்தி போலீஸ் ஸ்டேஷன் சென்று சையதுசாவுல் குறித்து கேட்டால், `நாங்கள் கைது செய்து, பின்னர் அவரை தமிழ்நாடு போலீஸார் வசம் விசாரனைக்காக ஒப்படைத்து விட்டோம். தமிழ்நாடு சென்று அங்குள்ள போலீஸாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர்’’. இதனைத் தொடர்ந்து நஸ்ரீன் மற்றும் அவரது  சகோதரர் பச்சு ஆகிய இரண்டு பேரும் கும்பகோணம் கிழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். 

அங்கு பணியில் இருந்த போலீஸார்களிடம் தாங்கள் வைத்திருந்த ஆதார்  அட்டையைக் காண்பித்து  இந்தியில் பேசினர். அங்கிருந்த போலீஸாருக்கு இந்தி மொழி தெரியாததால், அருகில் இருந்த மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர். அப்போது நஸ்ரீன் போலீஸாரிடம் கூறியதாவது, ``என் மகன் சையதுசாவுலை கர்நாடக மாநிலத்தில் உள்ள மாஸ்தி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 5 மாதங்களுக்கு முன்பு ஓசூர்  போலீஸார் வழக்கு தொடர்பாக  கைது செய்தனர். அதன்பின்னர், மாஸ்தி போலீஸ் ஸ்டேஷன் சென்று சையதுசாவுல் குறித்து கேட்டால், `நாங்கள் கைது செய்து பின்னர் அவரை தமிழ்நாடு போலீஸார் வசம் ஒப்படைத்து விட்டோம். எனவே அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. எனவே, தமிழ்நாடு சென்று அங்குள்ள போலீஸாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டனர். 

இதற்கிடையே  சில மாதங்களுக்கு முன்பு என்  செல்போனில் ஒருவர் பேசினார். அதில், சையதுசாவுல் தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ளார். எனவே, அவரை வந்து அழைத்து செல்லுங்கள் என தெரிவித்தார். நாங்கள் திருச்சி வந்து அந்த செல்போன் எண்ணிற்கு  மீண்டும் தொடர்பு கொண்டபோது  கும்பகோணம் போலீஸார் அழைத்து சென்று விட்டனர். எனவே, அங்கு சென்று கேட்டு கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர். இதனையடுத்து நாங்கள்  கும்பகோணம் வந்து ஒவ்வொரு காவல் நிலையமாகத் தேடி அலைகிறோம். ஆனால், இதுவரை  என் மகனை பற்றி எந்தவித  தகவலும் கிடைக்கவில்லை’’ என்றார். 

மகனைத் தேடி அலைந்த தாயின் வேதனையைப் புரிந்து கொண்ட கும்பகோணம் கிழக்கு போலீஸார் அவர்கள் வைத்திருந்த ஆதார் அட்டையை வாங்கி, அதில் உள்ள போட்டோ மற்றும் விபரங்களை  கம்ப்யூட்டரில் பார்த்தனர். ஆனால், ஆதார் அட்டையில் இருந்த  நபர் மீது கும்பகோணம் கிழக்குக் காவல் நிலையத்திலோ அல்லது வேறு காவல் நிலையத்திலோ  எந்தவித வழக்கு தொடர்பாகவும் அழைத்து வந்து விசாரணை செய்ததற்கான பதிவுகள் ஏதும் இல்லை. எனவே, அவர் இங்கு இருப்பற்கு வாய்ப்பில்லை என கூறினர். போலீஸார் கூறியதைக் கேட்டு நஸ்ரீன் மற்றும் அவரது சகோதரர் செய்வதறியாமல் திகைத்து மனம் வேதனை அடைந்து, அப்படியே போலீஸ் ஸ்டேஷனிலேயே அமர்ந்தனர். பின்னர், ஒருவேளை சையதுசாவுல் திருச்சி மத்திய சிறையில்  அடைக்கப்பட்டிருக்கலாம். எனவே அங்கு சென்று அவரது  ஆதார் அட்டையைக் காண்பித்து கேட்டால்  உண்மை தெரியவரும் என்று  அங்கிருந்தவர்கள் கூறினர். உடனே, அவர்கள் திருச்சி மத்திய சிறைக்குச் சென்று விசாரிப்பதாகக் கூறிவிட்டு  ஏமாற்றத்துடன் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!