வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (28/07/2018)

கடைசி தொடர்பு:22:30 (28/07/2018)

பத்தாண்டுகளுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் நிரம்பிவரும் வீராணம் ஏரி! - மகிழ்ச்சியில் விவசாயிகள்

பத்தாண்டுகளுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருவது கடலூர் மாவட்டத்தில் உள்ள காவிரி டெல்டா விவசாயிகளிடம் மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் வீராணம் ஏரி முக்கியமானது. கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகா விவசாயிகளின் உயிர் நாடியாக இந்த ஏரி உள்ளது. மேலும், சென்னை மக்களின்  குடி நீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. இந்த ஏரி மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாவில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் வசதி பெறுகிறது. கடும் வறட்சி காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் வீராணம் ஏரி வறண்டது.

வீராணம் ஏரி

தற்பொழுது, காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழைக்காரணமாக கர்நாடகாவில் காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டுர் அணை நிரம்பியதையடுத்து கடந்த 19ம் தேதி அணை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 22ம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. பின்னர், கல்லணையில் இருந்து கொள்ளிடத்திற்கு விநாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கீழணை முழு கொள்ளவான 8 அடியை எட்டியது. கீழணையில் நீரைத் தேக்கிவைக்க முடியாததால், கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 36 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. மேலும், வீராணம் ஏரிக்கு வடவாற்றில் விநாடிக்கு 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

வடவாற்றில் மலர் தூவி வரவேற்கும் விவசாயிகள்

வீராணம் ஏரிக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதை அடுத்து டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரும் வடவாற்றில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கக் கூட்டமைப்புத் தலைவர் இளங்கீரன் தலைமையில், விவசாயிகள்  மகிழ்ச்சியுடன் மலர் தூவி வரவேற்றனர். வீராணம் ஏரிக்கு காவிரி நீர் நேற்று வந்தது. இதேபோல், வடக்கு ராஜன் வாய்காலில் விநாடிக்கு 500 கன அடியும், தெற்கு ராஜன் வாய்காலில் விநாடிக்கு 500 கன அடியும், குமிக்கிமண்ணியாற்றில் விநாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் வீராணம் ஏரி, வடவாறு, தெற்கு, வடக்கு ராஜன் வாய்க்கால் ஆகியவற்றில் தண்ணீர் திறந்திருப்பது கடலூர் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேநிலை நீடித்தால் அடுத்த 10 நாள்களில் வீராணம் ஏரி தனது முழு கொள்ளவான 47.50 அடியை எட்டி நிரம்பும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.