`தமிழகத்தில் 70 சதவிகித பிரசவங்கள் அரசு மருத்துவமனையில்தான் நடக்கிறது!’ - அமைச்சர் பெருமிதம்

``இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 99.9 சதவீதம் தாய்மார்களுக்கு மருத்துவமனையில் பிரசவம் நடக்கிறது. இதில், கோடியில் ஒருவர் தான் இயற்கை முறையில் பிரசவம் பார்த்து குழந்தை பெற்று கொள்கின்றனர். அதில் தான் சமூக வலைதளமான யூடியூபைப் பார்த்து குழந்தை பெற்றுக் கொண்ட சம்வம் நடந்துள்ளது’’ என தஞ்சாவூரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

விஜய பாஸ்கர்

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18 லட்சம் செலவில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு சிகிச்சை மையம், சிறப்பு டயாலிஸஸ் மையம் ஆகியவற்றை திறந்து வைத்து அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
 'தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தற்போது புதிதாக 15 டயாலிஸஸ் கருவிகள் வழங்கப்பட்டு, புதிய சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஐ.சி.யு, பிசியோதெரபிக் உள்ளிட்ட நவீன சிகிச்சைகள் வழங்க 60 வயதை கடந்தவர்களுக்கு  சிறப்பு சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் டயாலிஸஸ் மையம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. 60 வயதைக் கடந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இவை, வயதானவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே ரூ.150 கோடியில் மல்டி சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கபட்டு முடிவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் இவை திறக்கப்படும். அதோடு சேர்த்து இருதய சிகிச்சை சிறப்பு பிரிவு ரூ.3.5 கோடியில் அமைக்கப்பட்டு அவையும் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. ரூ. 6 கோடி மதிப்பிலான இருதய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட உள்ளது. இதில் ஆஞ்சியோபிளாஸ்டிங், ஸ்டெட்டிங் உள்ளிட்ட சிகிச்சைகள் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும்.

 இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் 99.9 சதவீதம் தாய்மார்களுக்கு மருத்துவமனையில் குழந்தைகள் பிறக்கிறது. இதில் கோடியில் ஒருவர் தான் இயற்கை முறையில் பிரவசம் பார்க்கின்றனர். அதில் தான் சமூக வளைதளமான யூடியூபைப் பார்த்து குழந்தை பெற்றுக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இவை முற்றிலும் களையப்பட வேண்டும். இதுபோன்ற எண்ணம் யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக தான் அரசு மூலம் சுகாதாரத்துறை சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 தமிழ்நாட்டில் 70 சதவிகித பிரசவங்கள் அரசு மருத்துவமனையில் தான் நடைபெற்று வருகிறது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மக்கள் அரசு மருத்துவமனையை நம்பி வருகின்றனர். இந்தியாவில் குழந்தைகள் இறப்பு சதவீதம் தமிழகத்தில் குறைந்து வருகிறது. இந்தியாவில் 2030-ம் ஆண்டு ஆயிரம் பேருக்கு 70 பேர் என குறைக்க வேண்டும் என இலக்கு உள்ளது. தற்போது 2018-லேயே 62 பேராகக் குறைந்துள்ளது. இதற்கு மத்திய அரசு விருதுகளை வழங்கியுள்ளது.

இந்திய மருத்துவ ஆணையத்தை அமைப்பதற்கு மருத்துவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இந்த ஆணையத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இந்த ஆணையத்தின் மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பியபோது, தமிழக அரசின் சார்பில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சென்று முன்வைத்த வாதம் தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மக்கள் நல்வாழ்த்துறையில் தமிழகம்தான் வளர்ந்த, முன்னேறிய மாநிலமாக உள்ளதால் அதிக பிரதிநிதித்துவம் வேண்டும் என கேட்டுள்ளோம். ஏற்கெனவே பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கு மீண்டும் ஒரு கோர்ஸ் வேண்டாம் என வலியுறுத்தியுள்ளோம். எம்.பி.பி.எஸ், செவிலியர் படிப்பு படிக்காமல் வேறு படிப்பு படித்து மருத்துவம் பார்க்கும் முறையையும் தமிழக அரசு எதிர்க்கிறது' என அவர் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!