வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (29/07/2018)

கடைசி தொடர்பு:07:30 (29/07/2018)

`இது ஒரு சின்ன விதிமீறல் தான்’ -ராணுவ விமானம் வழங்கியது தொடர்பாக இல.கணேசன் கருத்து

இல.கணேசன்

“ஒரு தனி மனிதரைப் பற்றி அவர் இருக்கும்போதே வேறு விதமான செய்திகளைப் பரப்புவதில் என்ன திருப்தி இருக்கிறது. இது பண்பாட்டுச் சீரழிவு” என பா.ஜ.க எம்.பி இல.கணேசன் கூறியிருக்கிறார்.

பா.ஜ.க தெருமுனைப் பிரசார பொறுப்பாளர்களின் பயிற்சி முகாம் ஈரோடு- பெருந்துறை சாலையில் உள்ள பள்ளியில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பா.ஜ.கவின் மூத்த தலைவரும் எம்.பியுமான இல.கணேசன் கலந்துகொண்டார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியவர், “கருணாநிதியின் உடல்நிலை தேறிவருகிறது என அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் மூலம் அறிந்தேன். எந்தப் பேச்சாற்றலால் மக்கள் மத்தியில் அவர் செல்வாக்கு பெற்றாரோ, அந்த நாவன்மையோடு பேசக்கூடிய நிலைக்கு அவர் பூரண நலம் பெற்று வர வேண்டும். நீண்டகாலமாகவே, கருணாநிதி அவர்களுடைய உடல்நிலையைப் பற்றி பல்வேறு வதந்திகள் வந்திருக்கின்றன. நானே இதுபோன்ற வதந்திகளைக் கேட்டு கோபாலபுரத்திற்கு போன் அடிக்க, கலைஞரே அவருடைய கரகர குரலில் என்னிடம் பேசிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. பாரத நாட்டில் ஒரு தனி மனிதரை அவர் இருக்கும் போதே, வேறு விதமான செய்திகளைப் பரப்புவதில், என்ன திருப்தி இருக்கிறது எனப் தெரியவில்லை. இது ஒரு பண்பாட்டுச் சீரழிவு. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அறியாமையால் சிலபேர் செய்தி பரப்பினால் அது வேறு. ஆனால், திட்டமிட்ட ரீதியில் வதந்தியைப் பரப்புவதற்கு ஒரு கூட்டமே உருவாகியிருக்கிறது” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்திக்க மறுத்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. நேரம் கிடைக்காமலும், சில தவிர்க்க இயலாத காரணங்களாலும் சந்திப்பு நிகழாமல் இருந்திருக்கலாம். என்ன நடந்தது என நிர்மலா சீதாராமன் அவர்களே சொல்லுகிற வரை அதனுடைய பின்னணி என்னவென்று தெரியாது. ஒரு துணை முதலமைச்சரை அவமானப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் பா.ஜ.கவுக்கு இல்லை. 

2014-க்கு முன் நாடு விடுதலைப் பெற்றதிலிருந்து ஒரு கட்சியை பயமுறுத்துவதற்காகவோ, கூட்டணி சேர்ப்பதற்காகவோ என ரெய்டுகளை சகஜமாக நடத்தியது காங்கிரஸ் அரசாங்கம். அந்தக் காலம் 2014-லிலேயே மலையேறிவிட்டது. இந்தச் சோதனைகளுக்கும், அரசுக்கும் சம்பந்தமில்லை. வருமான வரித்துறை அவர்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்துகிறது. அந்தவகையில், உப்பைத் தின்றவன் நிச்சயம் தண்ணீர் குடித்துத் தான் ஆகவேண்டும். பன்னீர் செல்வம் தம்பிக்கு உடல்நிலை சரியில்லாத போது, அவசர மருத்துவ உதவிக்காக ராணுவ விமானத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கியது என்பது பெருந்தன்மையான விஷயம். இதில் என்ன தவறு இருக்கிறது. இது விதியில் ஏற்பட்டிருக்கின்ற ஒரு சின்ன விதிமீறல் தான். இது ஒன்றும் சட்டவிரோதமோ, தவறோ, துரோகமோ, முறைகேடோ இல்லை. அவசரத்துக்கு விமானத்தைப் பயன்படுத்தக் கொடுத்தது மனிதாபிமானம். இதற்காக அமைச்சரை பாராட்டவேண்டும்” என அதிரடித்தார்.