"மத்திய அரசிடம் பிச்சை எடுக்கமாட்டாேம்!" -மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை காட்டம்!

 தம்பிதுரை

"தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை மத்திய அரசிடம் கேட்டு பெறுவோம். அதற்காக மத்திய அரசிடம் பிச்சை எடுக்கமாட்டோம்" என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை காட்டமாக தெரிவித்தார்.

கரூரில் சணப்பிரட்டியில் நடைபெற்றுவரும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களிடம், "அதிமுக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பன்னீர் செல்வம், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரிக்கச் சென்றார். தற்போது கட்சியின் தலைவர்கள்தான் சென்று விசாரித்து வருகின்றனர். அரசு சார்பில் யாரும் செல்லவில்லை. அதே சமயம் தமிழுக்காகவும், தமிழகத்திற்காகவும் பாடுபட்ட மூத்த அரசியல்வாதி கருணாநிதி, தற்போது உடல் நலம் தேறி வருகிறார் என்கிற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. 

ஆற்று நீர் கடலுக்கும் செல்லவேண்டும் என்பது இயற்கை விதி. அந்த அடிப்படையில் காவிரி நீர் தற்போது கடலுக்குச்  செல்கிறது. தமிழகத்தில் தற்போது தேவையான அணைகள் இருக்கிறது. கூடுதல் தடுப்பணைகள் கட்ட உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மக்கள் மனதில் அதிமுக கட்சிதான் உள்ளது. அண்மையில் நடந்த கருத்து கணிப்புகளும் அதிமுகவுக்கு ஆதரவு பெருகி உள்ளதைக் காட்டுகிறது. ஜெயலலிதா இருந்தபோது 37 நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். ஜி.எஸ்.டி.தொடர்பாகவும், தமிழகத்தின் உரிமைகளைப்  பாதிக்கும் போதெல்லாமும் அதனை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறோம். தமிழகத்திற்கு வரவேண்டிய நிதிகளை மத்திய அரசிடம் கேட்டு பெறுவோம். அதற்காக  மத்திய அரசிடம் பிச்சை எடுக்க மாட்டோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!