‘‘தமிழகத் திட்டங்களுக்கு எதிராக விஷமப் பிரசாரம்!’’- சீறும் பொன்.ராதாகிருஷ்ணன் | ''Campaign against Tamil nadu policies ''- Pon Radhakrishnan

வெளியிடப்பட்ட நேரம்: 11:03 (29/07/2018)

கடைசி தொடர்பு:11:19 (29/07/2018)

‘‘தமிழகத் திட்டங்களுக்கு எதிராக விஷமப் பிரசாரம்!’’- சீறும் பொன்.ராதாகிருஷ்ணன்

‘‘தமிழகத் திட்டங்களுக்கு எதிராக விஷமப் பிரசாரம்!’’- சீறும் பொன்.ராதாகிருஷ்ணன்

சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழிச்சாலை திட்டம் மக்களிடையே பலத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறது. மத்திய - மாநில அரசுகள் இந்தத் திட்டம் குறித்து தொடர்ந்து ஆதரவுக் குரல் எழுப்புவதும், எதிர்க்கட்சியினர் எதிர்க்குரல் எழுப்புவதுமாக தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.

இந்நிலையில், எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிவரும் மக்களை சந்தித்துப் பேசச் செல்லும் தலைவர்களை தமிழக அரசு கைது செய்துவருவதும் தொடர்ந்துவருகிறது. ஏற்கெனவே, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி ஆகியோரைத் தமிழக அரசு கைது செய்துள்ளது. இந்தக் கைது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்துவருகின்றனர்.

பொன் ராதாகிருஷ்ணன்


சீமான் கைதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கண்டன அறிக்கை வெளியிட்டனர். அதில், ‘பொதுக்கூட்டம் நடத்தவில்லை; 8 வழிச் சாலையால் பாதிக்கப்படும் மக்களுடன் பேசிக்கொண்டிருந்ததே குற்றமா? 144 தடைச் சட்டம் போன்ற எதுவும் பிறப்பிக்கப்படாதபோது ஏன் இந்தக் கைது? இது அப்பட்டமான சட்டமீறல் நடவடிக்கை.

மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பான ஆட்சி மத்தியில் நடக்கிறது; அதன் ஏவுதலில் மக்களின் உயிரையும் பறிக்கும், சட்டத்துக்குப் புறம்பாக பதவியில் ஒட்டவைக்கப்பட்டிருக்கும் பழனிசாமியின் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது!இதனால் காவல்துறை ஏவல்துறையாக்கப்பட்டிருப்பதை அறியமுடிகிறது.நாம் தமிழர் சீமான் உள்பட சேலம்-படப்பை 8 வழிச் சாலை தொடர்பாக கைது செய்த அனைவரையுமே உடனடியாக விடுவிக்க வேண்டும்; அவர்கள் மீதான வழக்குகளையும் கைவிட வேண்டும்’ என்றும் அந்த அறிக்கையில், கோரிக்கை விடுத்துள்ளது.

மக்களின் கடும் எதிர்ப்பை சம்பாதித்துவரும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றியேத் தீரவேண்டும் என்ற முடிவோடு ஆளும் கட்சியினர் செயல்பட்டு வருவது ஏன்... என்ற கேள்வி அனைத்துத் தரப்பிலும் எழுந்துள்ளது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்....

‘‘மக்கள் எதிர்ப்பை மீறி, எட்டு வழிச் சாலைக்காக நிலம் கையகப்படுத்துவதில் மத்திய - மாநில அரசுகள் காட்டிவரும் இந்த அதீத அக்கறைக்கான பின்னணி என்ன என்ற சந்தேகம் மக்களிடத்தில் எழுகிறதே...?’’

‘‘மக்கள் யாரும் சந்தேகப்படவில்லை... ஒரு சில கூட்டுக் களவாணிகளுக்குத்தான் இந்த சந்தேகமெல்லாம். கன்னியாகுமரியில் துறைமுகம் என்றாலும் அல்லது வேறு எந்தத் திட்டங்கள் என்றாலும்கூட இவர்கள் சந்தேகம் எழுப்பிக்கொண்டேதான் இருப்பார்கள்.’’

‘‘சேதுசமுத்திரத் திட்டத்தில் மத நம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் பி.ஜே.பி அரசு, சேலத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டாமா?’’

‘‘கட்டாயம் மதிப்பளிக்க வேண்டும். அதேசமயம், தமிழ்நாட்டில் எந்தவொரு முன்னேற்றத் திட்டமும் வந்துவிடக் கூடாது என்று சில இயக்கங்கள் வலைதளங்கள் மூலமாகப் பிரசாரம் செய்துகொண்டிருக்கின்றன. 

ஜெயக்குமார்

சமீபத்திய உதாரணம் தூத்துக்குடி சம்பவம்தான். ‘சமூக வலைதளங்கள் மூலமாக நாங்கள் மூளைச்சலவை செய்யப்பட்டோம்’ என்று பாதிக்கப்பட்ட மக்களே சொல்லியிருக்கிறார்கள். இது ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா!’’

‘‘மக்கள் அதிகாரம் அமைப்பைக் குறிப்பிடுகிறீர்களா?’’

‘‘அந்த ஓர் அமைப்பு மட்டும்தான் என்று சுருக்கிவிடாதீர்கள்; அதுவும் ஒன்று. ‘மக்கள் அதிகாரம்’ என்பதே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இவர்களுடைய அதிகாரத்துக்கு மக்களைக் கொண்டுவருவதுதான் மக்கள் அதிகாரமா?’’ என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம்...

‘‘ஆதாரம் இல்லாமல் பேசுகிறார், பொறுப்பில்லாமல் பேசுகிறார், பொய் பேசுகிறார், விளம்பரத்துக்காகப் பேசுகிறார், கோயபல்ஸ்... என்றெல்லாம் அமைச்சர் ஜெயக்குமார் உங்களைப் போட்டுத் தாக்குகிறாரே...?’’ என்றோம்.

‘‘அண்ணே... கண்ணாடிக்கு முன்னே நின்னு பேசியிருப்பார்...’’ என்றார் சிரித்தவாறு!


டிரெண்டிங் @ விகடன்