''அதெல்லாம் தலைவர் நல்லாயிருக்குறாரு!'' துடிக்கும் உடன்பிறப்புகள் | Karunanidhi will be fine soon says his ardent followers

வெளியிடப்பட்ட நேரம்: 11:27 (29/07/2018)

கடைசி தொடர்பு:11:27 (29/07/2018)

''அதெல்லாம் தலைவர் நல்லாயிருக்குறாரு!'' துடிக்கும் உடன்பிறப்புகள்

கோபாலபுரத்தில் பேசிக்கொண்டிருந்த எல்லாரது பேச்சிலும் ''அதெல்லாம் நல்லாகி வந்துருவாருப்பா'' இந்த வார்த்தைகள் கட்டாயம் இடம் பெற்றிருந்தன. 

''அதெல்லாம் தலைவர் நல்லாயிருக்குறாரு!''  துடிக்கும் உடன்பிறப்புகள்

அதெல்லாம் ஒண்ணும் இல்லையாம்ப்பா... கொஞ்சம் காய்ச்சல்... பிரஷர் கொஞ்சம் அதிகம் அவ்ளோதானா... மத்தபடி தலைவர் நார்மலாதான் இருக்குறாராம்...

வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கெல்லாம் ஏதேதோ செய்தி வருதுனு சொல்லிக்குறாங்களே...

ஆஸ்பத்திரி அறிக்கைய படிச்சியா... அவங்க நல்லா இருக்காருனுதான் சொல்றாங்க...

அந்தம்மாவுக்கு நாம பாக்காத அறிக்கையா?

ஏய்... இப்ப உனக்கு என்ன பிரச்னை... அதெல்லாம் தலைவர் நல்லாயிருக்குறாரு கெளம்பு...

கடைசியில் வந்த வரிகள் சற்று கோபமாக இருந்தன. கோபாலபுரத்து வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்த இரண்டு பேரின் உரையாடல் இது. கோபாலபுரத்தில் பேசிக்கொண்டிருந்த எல்லாரது பேச்சிலும் ''அதெல்லாம் நல்லாகி வந்துருவாருப்பா'' இந்த வார்த்தைகள் கட்டாயம் இடம் பெற்றிருந்தன. 

தொண்டன்

எனக்கு நியாபகம் இருக்கிறது திமுக தலைவர் கருணாநிதி பற்றிய ஒரு செய்தி. அவருக்கு ஒரு பழக்கம் உண்டு. கடலை சாப்பிடும் போது இரண்டு நல்ல கடலைகளை எடுத்து தனது இடது கையில் வைத்துக் கொள்வார். பின்னர் சாப்பிடும் போது ஒருவேளை கசப்பு கடலைகளை உண்ணும் சூழல் வந்தால் இந்த இரண்டு நல்ல கடலைகளை சாப்பிட்டு அதனை சரிசெய்வாராம். கசப்பான சூழலில் இருந்து மீண்டு வருவது கருணாநிதிக்கோ... திமுகவுக்கு புதிய விஷயமல்ல... இன்று கோபாலபுரத்திலும், காவேரி மருத்துவமனையிலும் கூடியிருக்கும் அனைவரது விருப்பமும் அதுவாகத்தான் உள்ளது.

வியாழக்கிழமை மாலையே நாங்கள் இங்கு கூடத்துவங்கிவிட்டோம். தலைவர் பற்றி பரவும் இந்த வதந்தி எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆண்டுக்கு இரண்டு, மூன்று முறை என்று ஆரம்பித்த வதந்தி இன்று ஒரு வாரத்துக்கு இரண்டு, மூன்று முறை என்றெல்லாம் பரவியது. அந்த நொடியில் சற்று மனம் கனத்து போனாலும், எங்களின் ஒரே நம்பிக்கை. ''எப்போதும் போல் இப்போதும் கலைஞர் வருவார்... என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே'' என கரகர குரலில் பேசுவார் என்பதும் மட்டும் தான். 

karunanidhi

ஒவ்வொரு வதந்தியின் முடிவிலும் தலைவர் ஆச்சர்யப்பட வைப்பார். பாட்ஷா படம் பார்த்துகொண்டிருக்கிறார் என்ற செய்தி வரும், சி.எஸ்.கே வெற்றியைக் கொண்டாடுகிறார், தன் பேரனுக்கு அமர்ந்தபடியே பந்துவீசுகிறார், பிறந்தநாள் அன்று வீட்டு வாசலில் தொண்டர்களுக்கு கையசைத்து வாழ்த்து வழங்குகிறார். இந்த தருணங்களில் எல்லாம் எங்கள் மனதில் அடுத்த கூட்டத்தில் தலைவர் பேசுவாரு பாரு என்று தான் அந்த இடத்தை விட்டு நகருவோம்.

இன்றும் அப்படியே தான் நகர முயற்சிக்கிறோம். ஸ்டாலின் நீங்கள் நலமாக இருப்பதாக கூறுகிறார், அழகிரியும், கனிமொழியும் அழுகிறார்கள், துரைமுருகன் இறுக்கமாக இருக்கிறார், தலைவரின் உடல்நலம் விசாரித்துவிட்டு வரும் திருமாவளவன் கண்கலங்கிய நிலையில் இருக்கிறார். ஓபிஎஸ், ஜெயக்குமார் என அனைத்து அதிமுக அமைச்சர்களும் கோபாலபுரம் வீட்டுக்கு வருகிறார்கள், இது கோபலபுரமா.. கோட்டையா என்று எண்ணுமளவுக்கு காட்சிகள் விரிகின்றன. இவ்வளவு ஏன் நரேந்திர மோடியின் ட்விட்டர் பதறுகிறது. இதையெல்லாம் பார்த்தால்தான் மனது பதறுகிறது. ஒருவேளை தலைவருக்கு ரொம்பவே சீரியஸோ... மாவட்டத்து தெரிஞ்ச ஒருத்தர் அறிவாலயத்துக்குள்ள இருக்காரு.. அவர்கிட்ட விசாரிச்சேன் கொஞ்சம் முடியல தானாம். ஆனா பெரிய பிரசனை எதுவும் இல்லனு பக்கத்துல இருந்த ஒரு அண்ணே சொல்லும் போதுதான் கொஞ்சம் உசுரே வந்துச்சு. 

ஊருல இருந்து வந்த ரெண்டு பேரு கோபாலபுரம் வீட்டு முன்னாடியே படுத்திருக்காங்க, காவேரி ஆஸ்பத்திரிக்கு வெளில தலைவர் வாழ்கனு கோஷம் போட்டுகிட்டு இருக்காங்க.. பெரிய பேனர்ல எல்லாரும் கையெழுத்து போட்டுகிட்டு இருக்கோம். ஊர்ல இருந்து வர்ற போனுக்கெல்லாம் 'தளபதி சொல்லிட்டாரு... தலைவர் நல்லா இருக்க்காராம்னு'' திருவாருர்ல இருந்து வந்த ஒரு அண்ணே சொல்லிகிட்டு இருந்தாரு.

ஸ்டாலின்

இதுக்கு நடுவுல வாட்ஸ் அப்லயும், ஃபேஸ்புக்லயும், மெரினால இடம் சுத்தம் பண்ணுறாங்களாம், சேலத்துல எடப்பாடி மீட்டிங் கேன்சல் ஆகிடுச்சாம், ராஜாஜி அரங்கம் தயார் ஆகிட்டு இருக்குனு சொல்லி நம்மள ப்ரஷர் ஏத்துறாங்க. ஆனா தலைவருக்கு வெறும் பிரஷர் அதிகமாகிருக்கு வேற ஒண்ணும் இல்லனு ஆஸ்பத்திரி சொல்லுது. கடைசியா தலைவர ஆஸ்பத்திரிக்கு கொண்டு போற வீடியோ வந்துச்சு. அதுல தலைவர ஓரமா பாக்க முடிஞ்சுச்சு. ஒரு நிமிஷம் கண்ணு கலங்கிடுச்சு. அவர ஒருதடவ ஜெயலலிதா அரஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டாங்க.. அப்ப அந்த காட்சிய பாத்த அதிமுக தொண்டன் கூட என்னப்பா அவர் வயசுக்கு ஒரு மரியாதை இல்லையானு கேட்டான். இன்னிக்கும் அதே தொண்டன், அம்மா போனதுக்கு அப்புறம் தமிழ்நாட்டு அரசியலுக்கு தலைவர்தான்பா அடையாளம் அவர் இன்னும் கொஞ்ச நாள் நல்லா இருக்கணும்னு வேண்டுறான். இதெல்லாம் சினிமா க்ளைமேக்ஸ்லதான் பாக்க முடியும். ஆனா இங்க நிஜத்துல நடக்கும் காரணம் கருணாநிதி எனும் தலைவர்தான். வியாழன் ஆரம்பிச்சு இன்னுக்கு ஞாயித்துகிழமை தலைவர் நல்லா இருக்காருங்குற செய்தி கேட்கும்போதெல்லாம் கோபாலபுரம் அதிருது. காவேரி ஆஸ்பிட்டல் கோஷமிடுது. 

காவேரி ஆஸ்பிட்டல் ஐசியுவுக்கு நாங்க போடும் சத்தம் கேட்குமா... கேட்காதானு தெரியல.. ஊர்ல தேர்தல் நேரத்துல நீங்க வர்ற வண்டிக்கு முன்னாடி ''டாக்டர் கலைஞர் அழைக்கிறார்னு'' மைக்ல ஒரு குரல் ஒலிக்கும். இன்னிக்கும் அதே மாதிரி நீங்கள் அழைத்தீர்கள்னு தான் வந்திருக்கோம். பல நேரங்கள்ல எங்கள் மனநிலை உங்களுக்கு புரிந்திருக்கிறது. இன்றும் உங்களுக்கு புரியும், தலைவரே.... காலை உதிக்கும் சூரியன் நல்ல செய்தி சொல்லும்... எல்லாரிடத்திலும் கூறிவிட்டோம். கலைஞர் வருவார்... கரகரகுரலில் பேசுவார் என்று... எழுந்து வாருங்கள் தலைவரே... என்கிறார்கள் கோபாலபுரத்திலும் மருத்துவமனையிலும் குழுமியிருக்கும் உடன்பிறப்புக்கள்


 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close