வெளியிடப்பட்ட நேரம்: 11:59 (29/07/2018)

கடைசி தொடர்பு:11:59 (29/07/2018)

தமிழக மக்களுக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றியவர் கருணாநிதி! - பா.ஜ.க புகழாரம் #Karunanidhi

உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பா.ஜ.கவின் முரளிதர் ராவ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் டெரிக் ஓ பிரையன் ஆகியோர் நேரில் விசாரித்தனர். 

முரளிதர் ராவ்

வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த ஓராண்டுக்கும் மேலாக வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். நோய்த்தொற்று ஏற்படும் என்பதால் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும் அவர் தவிர்த்து வந்தார். சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில், நேற்று அதிகாலை 1.30 மணியளவில் அவருக்குத் திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததால், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோபாலபுரம் வீடு மற்றும் மருத்துவமனை ஆகிய இடங்களில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கட்சி பேதமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். 

காவேரி மருத்துவமனையில் டெரிக் ஓ பிரைன், இல.கணேசன், மதுரை ஆதீனம், சீமான்

அந்தவகையில், காவேரி மருத்துவமனைக்கு இன்று பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நேரில் வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தனர். பா.ஜ.கவின் தேசியப் பொதுச்செயலாளர் முரளிதர் ராவ், மாநிலங்களவை எம்.பி. இல.கணேசன், மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி. டெரிக் ஓ பிரையன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்திருந்தனர். மேலும், மதுரை ஆதினமும் கருணாநிதி உடல்நிலை குறித்து நேரில் வந்து விசாரித்தார். 
மருத்துவமனை வாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய டெரிக் ஓ பிரையன், ``மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சார்பாக கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள நான் இங்கு வந்திருக்கிறேன். கனிமொழி மற்றும் ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன்’’என்று தெரிவித்தார். 
பா.ஜ.கவின் முரளிதர் ராவ் பேசுகையில், ``தி.மு.க தலைவராகவும், முதலமைச்சராகவும் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மக்களுக்கு கருணாநிதி சேவை செய்திருக்கிறார். தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு வகைகளில் கருணாநிதி பங்களிப்பு செய்திருக்கிறார். மத்திய, மாநில அரசுகள் இடையிலான உறவுகளை வரையறை செய்வதில் கருணாநிதி ஆற்றிய பங்கு முக்கியமானது. அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும். அதுவே பா.ஜ.கவின் விருப்பம். கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டறிந்தோம்’’என்றார்.