வெளியிடப்பட்ட நேரம்: 13:37 (29/07/2018)

கடைசி தொடர்பு:14:46 (29/07/2018)

கருணாநிதியைப் பார்த்தேன்; உடல்நிலை சீராக இருக்கிறது! - வெங்கையா நாயுடு தகவல்

உடல்நலக்  குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்ததாகத் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வெங்கையா நாயுடு

 

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வயது மூப்பின் காரணமாக உடல்நலிவு ஏற்பட்டதாக இரண்டுநாட்களுக்கு முன்பு காவேரி மருத்துவமனையிலிருந்து அறிக்கை வெளியானது. அறிக்கையை தொடர்ந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக அ.தி.மு.க, வி.சி.க, த.மா.க, உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவரவர்கள் கோபாலபுரத்துக்கு வருகை புரிந்தனர். அவர்கள் வருகையையடுத்த சில மணி நேரங்களிலே கோபாலபுரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஏராளாமான தொண்டர்கள், தி.மு.க தலைவரின் உடல்நலம் குறித்து அறிந்து கொள்வதற்காக கோபாலபுரம் இல்லம் முன்பு குவிந்தனர். இந்தநிலையில், ரத்த அழுத்தம் அதிகரித்ததன் காரணமாக கோபாலபுரம் இல்லத்திலிருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது என ஆ.ராசா தெரிவித்தையடுத்து, தொண்டர்கள் நிம்மதியடைந்தனர்.

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும், திரைத்துறையினரும்,  அவரது உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள மு.க.ஸ்டாலினை நேரில் சந்நித்து, உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோர் நேற்று காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்தனர். மாநில முதல்வர்கள் சிலரும் கருணாநிதி உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தனர். இந்நிலையில் சென்னை வந்துள்ள துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்தார். அவருடன், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். காவேரி மருத்துவமனைக்குச் சென்ற அவர், கருணாநிதியைப் பார்த்ததாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர், `தி.மு.க தலைவர் கருணாநிதியைப் பார்த்தேன். அவரது உடல்நிலை குறித்து, குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். அவர் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் விரைவில் குணம் பெற வேண்டுகிறேன்'  என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுவரை மருத்துவமனைக்கு வந்த தலைவர்களிலேயே கருணாநிதியை, நேரில் பார்த்த முதல் தலைவர் வெங்கையா நாயுடுதான் என்பது குறிப்பிடத்தக்கது.