கத்தியால் கேக் வெட்டிய 'ரௌடி' பினு எங்கே?  ஐ.சி.யூ-வில் உளவு போலீஸ் | What happened to rowdy binu?

வெளியிடப்பட்ட நேரம்: 15:42 (29/07/2018)

கடைசி தொடர்பு:15:42 (29/07/2018)

கத்தியால் கேக் வெட்டிய 'ரௌடி' பினு எங்கே?  ஐ.சி.யூ-வில் உளவு போலீஸ்

ஜெயிலுக்குப் போன பினு, ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்த போது, போலீஸ் தரப்பில் 'ஸ்ட்ராங்க்லி அப்ஜெக்‌ஷன்' செய்யவில்லை. நிபந்தனை ஜாமீனில் பினு எளிதாக ரிலீஸ் ஆனார். கோர்ட்டில் சொன்னபடி சம்பந்தப்பட்ட  போலீஸ் ஸ்டேஷனில் தினமும் ஆஜராகிக் கையெழுத்துப் போடாமல் 'எஸ்கேப்'பும் ஆனார். மிக ஊன்றிக்கவனித்தால், பினு கைது முதல், ஜாமீனில் விடுவிப்பு வரை ஒவ்வொரு அசைவிலும் உளவுப்பிரிவுப் போலீஸாரின் பங்களிப்பு இருக்கிறது.

கத்தியால் கேக் வெட்டிய 'ரௌடி' பினு எங்கே?  ஐ.சி.யூ-வில்  உளவு போலீஸ்

போலீஸ் மீது பொது மக்களுக்கு எப்போது முழு நம்பிக்கை பிறக்கும் என்ற ஆராய்ச்சியில் பொறுப்பு மிக்க காக்கிகள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதை முகநூலில் பதிவிட்ட இளைஞரைப் போலீஸார் நேற்று கைது செய்திருக்கிறார்கள். ஐநூறு ரௌடிகளுக்கு மத்தியில் இதே ஸ்டைலில் பிறந்தநாள் கொண்டாடிய ரௌடி பினுவைப் பிடித்து, பின்னர் பறக்க விட்டிருக்கிறார்கள். 'அய்யா, நான் அவ்வளவு வொர்த் இல்லய்யா... ச்சும்மாங்காட்டியும் கத்தியில ச்சும்மாங்காட்டியும் கேக் வெட்டி கொண்டாடினேன்யா... என்னை மன்னிச்சு விட்ருங்கய்யா' என்று பினு கதறியதாக, கோலிவுட் பாணியில், போலீஸார் டீஸர் ரிலீஸ் செய்தனர். ஜெயிலுக்குப் போன பினு, ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்த போது, போலீஸ் தரப்பில் 'ஸ்ட்ராங்க்லி அப்ஜெக்‌ஷன்' செய்யவில்லை. நிபந்தனை ஜாமீனில் பினு எளிதாக ரிலீஸ் ஆனார். கோர்ட்டில் சொன்னபடி சம்பந்தப்பட்ட  போலீஸ் ஸ்டேஷனில் தினமும் ஆஜராகிக் கையெழுத்துப் போடாமல் 'எஸ்கேப்'பும் ஆனார். மிக ஊன்றிக்கவனித்தால், பினு கைது முதல், ஜாமீனில் விடுவிப்பு வரை ஒவ்வொரு அசைவிலும் உளவுப்பிரிவுப் போலீஸாரின் பங்களிப்பு இருக்கிறது... இங்கே பங்களிப்பு என்ற குறியீடு, பினு தப்பித்தல் குறித்தது அல்ல, பினு போன்ற ரௌடிகளின் அசைவுகளை அறிந்திருத்தல் குறித்ததே... ஒரு கொலை வழக்கின் முடிச்சு அவிழ்வதற்குள் அடுத்த கொலை, கொள்ளை, கடத்தல், ஆசிட் வீச்சுக்கான வன்முறையில் இன்னொரு புது அத்தியாயம் பிறந்து விடுகிறது .

போலீஸ்  

"ஒவ்வொரு போலீஸ் ஸ்டேசன் லிமிட்டிலும் தலா, 5 'சோர்ஸ்' என்ற கணக்கில் சிட்டியில் இருக்கும் 134 காவல் நிலையத்திலும் போலீஸ் சோர்ஸுக்கான ஆட்கள் உண்டு. போலீஸ் கவனத்துக்கே வராமல் இருக்கும் சமூக விரோத செயல்களை இங்குள்ள சோர்ஸ்கள் சேகரித்து அதை கமிஷனர் லெவலுக்கு கொண்டு போய்ச் சேர்ப்பார்கள். கமிஷனர், உரிய நேரத்தில் தனக்குக் கீழ் இருக்கும் நம்பிக்கையான ஆட்கள் மூலம் அதற்கான தீர்வை நடைமுறைப்படுத்துவார். இது காலங் காலமாக இருந்து வரும் ரகசிய நடைமுறை. ஒரு காலத்தில் இந்த சோர்ஸ்கள், போலீஸ் ஆள்காட்டி என்று கொச்சைப் படுத்தப் பட்டனர். அதற்கேற்றார் போல குற்றப் பின்னணி உள்ளவர்கள், தாமே முன்வந்து சில விஷயங்களை போலீசஸுக்கு சொல்லி விட்டுப் போய்க் கொண்டிருந்தனர். காலப் போக்கில், படித்தவர்கள், சமூக ஆர்வலர்கள் 'போலீஸ் சோர்ஸ்' களாக வந்த போதுதான் போலீஸின் வலம் வந்தனர். இன்றைய தேதியில் அப்படிப்பட்ட சோர்ஸ்கள் வெகுவாகக் குறைந்து வருகின்ற நிலை காணப்படுகிறது. முக்கியமானத் தகவல்களை கலப்படம் இல்லாமல் கொண்டுவந்து சேர்க்கும், சோர்ஸ்களில் சிலருக்கு பண உதவியும் கூட  சைலண்ட்டாகப் போய்க் கொண்டு இருந்த காலமெல்லாம் எவரெஸ்ட்டை விட உயரத்துக்குப் போய், ஆண்டுகள் பல ஓடிவிட்டது.

போலீஸ் ஸ்டேசன்களில் நடப்பதைச் சொல்லவும், அந்தந்த பகுதிகளில் உள்ள அரசியல் பிரமுகர்களின் மூவ் மென்ட்டை கவனிக்கவும் (ஐ.எஸ்.) ஒற்றுப்பிரிவு போலீஸார், ஸ்டேசன் வாரியாக நியமிக்கப் படுகின்றனர். அவர்கள் மூலமாக தகவலைப் பெறும் ஒற்றுப் பிரிவின் உதவி கமிஷனர்கள் அதை கமிஷனர் லெவலில் கொண்டு போய் சேர்த்து விடுவார்கள். சென்னையில் கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் என்று பதவிகளும், அதிகாரங்களும் பகிரலாகப் போன பின்னர், இந்த 'ஒற்றுப் பதவி' களே தனித்தனியாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றன. அதை, 'லெவல்- ஒன், லெவல்- டூ' என்கிறார்கள். இந்த 'லெவல்' போஸ்டிங்கில் வருகிற ஏட்டு. எஸ்.ஐ.கள் , முதலில் தங்களுடைய உயரதிகாரிகளான இணை கமிஷனர் அல்லது கூடுதல் கமிஷனருக்கு தகவலைச் சொல்லி விட்டு அதன் பின்னர் அந்த உயரதிகாரி கண்ணசைத்தால் அதை கமிஷனர் லெவலுக்கு கொண்டு செல்கிறார்கள். இது காவல் துறையில் அதுவும் சென்னை போலீசில் ரொம்பவும் புதுசு. அடிப்படையிலேயே கோளாறை வைத்துக் கொண்டு, மற்ற பொதுப் பிரச்சினைகளுக்கு போலீசாரால் தீர்வைச் சொல்லி விட முடியாது. ஒரு கொலையோ, பதறவைக்கும் சம்பவமோ குறிப்பிட்ட ஒரு ஏரியாவில் அடிக்கடி தொடர்கிறது என்றால், காவல் உயரதிகாரிகள் செய்யும் முதல் வேலை, அங்கிருக்கும் போலீசாரை இடமாற்றம் செய்வதுதான். புதிதாய் வேறிடத்துக்கு அவர்களை போஸ்டிங் போட்டு அங்கும் அதே நிலை தொடர்ந்தால் சம்மந்தப் பட்டவர்களை அங்கிருந்து வேறொரு இடத்துக்கு மாற்றுவது என்று சர்வீஸ்காலம் முடியும்வரை மாற்றிக் கொண்டேதான் இருக்கிற சூழ்நிலை இருக்கிறது. இதுபோன்ற தவறான திட்டமிடல்கள், குற்றங்களைக் குறைக்க ஒருபோதும் துணை வரப்போவதில்லை. குற்றங்கள் பரவலாகத்தான் வழிவகுக்கும்.

ரௌடி வேட்டையில் போலீஸ்

'காக்கிகளின் கௌரவம் காப்பாற்றப் படவேண்டும்' என்ற எண்ணத்துடன் நம்மிடம் பேசிய சீனியர் அதிகாரிகள், "சென்னை வியாசர்பாடியில் ஒருமுறை அடுத்தடுத்து குற்றச் சம்பவங்கள் தொடரவே அங்கு பணியாற்றிய போலீஸார், உதவி கமிஷனர் போன்றோர் இடமாற்றம் செய்யப் பட்டனர். அதேபோல், எழும்பூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த ஒரு பெண் மருத்துவரும், ஒரு கோட்டீஸ்வரப் பெண்ணும், அடுத்தடுத்து கொலை செய்யப் பட்டுவிட அங்கு பணியாற்றிய சில போலீஸார் இடமாற்றம் செய்யப் பட்டனர். தோள் பட்டையில் அசோக சக்கரம் வைத்துள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சப்போர்ட் இருக்கத்தான் செய்கிறது. சிலருக்கு மையத்திலும், சிலருக்கு மாநிலத்திலும் இருக்கிறது. ஒரு சிலருக்கு உள்ளூர் மட்டத்தில் சப்போர்ட் இருக்கிறது. எந்த சப்போர்ட்டும் இல்லாமல், வேகமாகக் கடமையைச் செய்யும் போலீஸார்தான் இடமாற்றம் என்ற பேரில் அநியாயத்துக்கு தூக்கி வீசப் படுகின்றனர். இப்படிப் போனவர்கள் சர்வீஸ் முடியும் வரை விரும்பிய இடம் கிடைக்காமல், வெளியூர் வாழ்க்கையிலேயே தங்கள் சர்வீஸைக் கழித்து, மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகின்றனர். போதுமான சப்போர்ட் இருக்கிற யாரை துறை ரீதியாகப் 'பனிஷ்' செய்தாலும், இடமாற்றம் செய்தாலும் மீண்டும் பழைய இடத்துக்கே சாதாரணமாக போஸ்டிங் வாங்கிக் கொண்டு வந்து விடுகிறார்கள். பனிஷ்மென்ட்டையும் கேன்சல் செய்து விடுகிறார்கள். செல்வாக்கு மிக்கவர் கான்ஸ்டபிள் லெவலில் இருந்தாலும் அவரை எந்த உயரதிகாரியாலும் ஒன்றும் செய்துவிட முடியாது. போலீஸ் பாதுகாப்பும், போலீஸ் பலமும் அதிகமாக வெளியில் இருந்தாலும், அதையும் தாண்டி பெரும்பாலான சம்பவங்கள் நடப்பதற்கு 'ஃப்ரிஸன் ஆபரேசன்' ஒரு காரணமாக இருந்து விடுகிறது. சிறையில் இருந்தே கொலை, கொள்ளைக்கான அத்தனை உத்திகளும், வெளியில் இருக்கும் கூட்டாளிகளுக்குப் பகிரப்பட்டு வெற்றிகரமாக அந்த அசைன்மெட் செய்து முடிக்கப் படுகிறது. சிறையில் இருக்கும் ஒரு கைதியை பார்க்க ஒரே ஆள் தொடர்ந்து மனு போட்டுக் கொண்டிருக்கிறான் என்றால் அவனை கண்காணிக்க வேண்டும், சிறையில் இருக்கும் அவனுடைய லீடரிடமிருந்து அவன் என்ன மாதிரியான வேலைகளை வாங்கிக் கொண்டு வெளியே போகிறான்? வாங்கிக் கொண்டு போன காரியத்தை நிறை வேற்றுகிறானா? அவன் எந்த போலீஸ் லிமிட்டில் இருந்து வருகிறான் , போன்ற தகவல்களை உடனுக்குடன் மேலதிகாரிகளுக்கு சிறை வாசலில் இருக்கும் ஐ.எஸ். (ஒற்றுப் பிரிவு) போலீஸார் சொல்ல வேண்டும்.அதே போல் எந்த தேதியில் எந்த அக்யூஸ்ட் சிறையில் இருந்து வெளியே வருகிறான், அவன் எந்த டீமின் அசோசியேட்? அதேபோல் உள்ளே வரும் அக்யூஸ்ட் ஏதாவது திட்டத்தோடு வந்திருக்கிறானா? இப்படி மிகவும் கண்காணிக்கப் படவேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது..." என்றனர்.

ரௌடி பினு கைது காட்சி

சென்னையில் 134 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 128 குற்றத் தடுப்பு காவல் நிலையங்கள், 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 70 போக்குவரத்துக் காவல் நிலையங்கள் உள்ளன. சென்னை போலீஸ் கமிஷனருக்கு கீழே நார்த், செளத், சென்ட்ரல் என்று மூன்று இணை கமிஷனர்கள் பொறுப்பில் இருந்தது மாறி, அந்த இடத்திற்கு நார்த், சவுத் என்று இரண்டு கூடுதல் கமிஷனர்கள் பொறுப்பு வகிக்கின்றனர். அதேபோல், போக்கு வரத்துக்கு ஒரு கூடுதல் கமிஷனர், மத்திய குற்றப் பிரிவுக்கு ஒரு கூடுதல் கமிஷனர், நுண்ணறிவுக்கென ஒரு கூடுதல் கமிஷனர் ஆகிய மூன்று கூடுதல் கமிஷனர் பதவிகள் உள்ளன. இப்போது நுண்ணறிவுப் பிரிவுக்கு கூடுதல் கமிஷனர் இல்லை. அந்தப் பதவியிடம், காலியிடமாகவே ஆண்டுக் கணக்கில் இருக்கிறது. நுண்ணறிவுப் பிரிவுக்கு முன்னர் இருந்தது போல் இல்லாமல் இரண்டு துணை கமிஷனர்கள், இப்போது பொறுப்பில் இருக்கிறார்கள். கூடுதல் போலீஸ் கமிஷனர்களின் கீழ், இணை போலீஸ் கமிஷனர்கள் உள்ளனர். இவர்களின் கீழே துணை கமிஷனர்கள், துணை கமிஷனர்களின் கீழே இரண்டு முதல் மூன்று உதவி கமிஷனர்கள் உள்ளனர். அவர்களுக்கும் கீழே இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ் பெக்டர்கள், தலைமைக் காவலர்கள், காவலர்கள் என்று போலீஸ் படை, படிப்படியாக அணி வகுக்கும். இத்தனை இருந்தும் விரும்பத்தகாத கொடூரங்கள், அவ்வப்போது அரங்கேறி விடுவதுதான் வேதனை அளிக்கிறது. மக்களோடு, மக்களாகப் பயணிக்க, மக்கள் உதவியுடன் குற்றங்களைத் தடுக்க போலீஸார் முன்னெடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தொடர்ந்து தோல்வியில்தான் முடிந்து வருகிறது. போலீஸாரைத் தாக்கும் பொதுமக்களின் எண்ணத்தை 'எக்ஸ்-ரே' பார்வையுடன் ஆராயவேண்டிய கடமையும், பொறுப்பும் போலீஸாருக்கு இருக்கிறது. உள்ளூர் ஐ.எஸ்., யார் என்பது முதல், எஸ்.பி.சி.ஐ.டி, உளவுப் போலீஸ் யார் என்பது வரையில் பெட்டிக்கடையில் வெற்றிலைப் பாக்கு விற்கிற ஆசாமிக்குத் தெரிந்திருக்கிறது. கள்ளக் கடத்தல் கும்பல் இரண்டு கால்களைத் துண்டித்த நிலையிலும் வாய் விட்டுக் கத்தாமல் ஊமையாக நடித்து அதைக் கடைசி வரைக் காப்பாற்றும் இன்டலிஜென்ஸ் பாத்திரங்களை சினிமாவில் பார்த்தாவது போலீஸார் தங்கள் போக்கை மாற்றிக் கொள்வது அவர்களுக்கும், நாட்டுக்கும் நல்லது... 

'என்ன கேட்டீங்க, படத்தோட பெயரா... அஞ்சல் பெட்டி 520'...


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close