வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (29/07/2018)

கடைசி தொடர்பு:05:48 (30/07/2018)

‘2221-ல் ஆட்சிக்கு வரும்போது எங்களைக் கருணாநிதி வாழ்த்த வேண்டும்!’ - செல்லூர் ராஜு அதிரடி

‘2221-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வரும்போது எங்களைக் கருணாநிதி வாழ்த்த வேண்டும்’ என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார். 

செல்லூர் ராஜூ

அ.தி.மு.க சார்பில் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அப்போது பல்வேறு தரப்பினருக்கு அ.தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, ``அ.தி.மு.க வரும் 2221-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியமைக்கும்போது, அதை திமுக தலைவர் கருணாநிதி பார்த்து, எங்களை வாழ்த்த வேண்டும். இதைத்தான் அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் விரும்புகின்றனர். கருணாநிதியைப் பொறுத்தவரை, அவர் திராவிட இயக்கத்தின் பழம் பெரும் தலைவர், தமிழில் பல சாதனைகளைப் படைத்தவர். கதை, வசனகர்தாவாக இருந்தவர், மிகச் சிறந்த சாணக்கியவாதி. அப்படிப்பட்ட தலைவர் இந்த நாட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக நீண்ட நாள்கள் வாழ வேண்டும் என நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.  2021-ல் அதிமுக ஆட்சியமைக்கும் என்று சொல்வதற்குப் பதிலாக 2221 என மாற்றிக் கூறியதால் தற்போது செல்லூர் ராஜூவை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.