வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (29/07/2018)

கடைசி தொடர்பு:18:39 (29/07/2018)

டி.டி.வி தினகரன் இல்லம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு - சிசிடிவி காட்சி வெளியீடு

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வீட்டின் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

சிசிடிவி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட நகர செயலாளராக இருந்தவர் புல்லட் பரிமளம். கட்சியின் விதிமுறைகளை மீறியதாகக் கூறி கடந்த 20 நாள்களுக்கு முன்பு, புல்லட் பரிமளம் மற்றும் அவரது மனைவியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார் டி.டி.வி.தினகரன். இந்நிலையில், இன்று பெசன்ட் நகரில் உள்ள டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு வந்த புல்லட் பரிமளம், முன்கூட்டியே வைக்கோல்களை, தனது காரில் பதுக்கி வைத்துள்ளார். இதையடுத்து, கையில் 5 லிட்டர் கேனில் பெட்ரோலை எடுத்து வந்தவர், காரில் பெட்ரோலை ஊற்றி எரிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது டி.டி.வி.தினகரனின் புகைப்படக் கலைஞர் டார்வின் மற்றும் ஓட்டுநர் பாண்டியன் ஆகியோர்  புல்லட் பரிமளத்தைத் தடுக்க முயற்சித்துள்ளனர். உடனே, சுதாரித்துக்கொண்ட அவர், பெட்ரோல் கேனை கொளுத்திவிட்டுள்ளார். இதனால், டார்வின் மற்றும் பாண்டியன் ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.