வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (29/07/2018)

கடைசி தொடர்பு:07:08 (30/07/2018)

தி.மு.க, அ.தி.மு.க இரு கட்சிகளுமே தமிழை வளர்த்தன - அமைச்சர் பேச்சு

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் ஒன்று கூடல் மாநாடு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. தமிழ்ச் சங்கமம் என்ற தலைப்பில் ஜூலை 27-ம் தேதி துவங்கப்பட்ட இம்மாநாட்டின் நிறைவுவிழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றிய அமைச்சர் பாண்டியராஜன் ‘தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே தமிழை வளர்த்தன என்று கூறி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். இதுநாள் வரை தி.மு.க-வின் எந்த ஒரு பங்களிப்பையும் அ.தி.மு.க-வினர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதில்லை. அதுபோலவே அ.தி.மு.க-வினரின் பங்களிப்பை தி.மு.க-வினர் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். இந்நிலையில்தான் அமைச்சர் பாண்டியராஜனின் இந்தப் பேச்சு, தமிழ் அறிஞர்கள் மற்றும் மாணவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை இணைந்து ஏற்பாடு செய்த இந்த மாநாட்டில் டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.

 

இன்று நடைபெற்ற நிறைவு விழாவில் சிறப்புரையாற்றிய தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ``இந்தியாவில் உள்ள தேசிய இனங்களிலேயே அதிகளவில் புலம் பெயர்ந்த இனம் தமிழினம். உலக அளவில் யூதர்களுக்கு அடுத்தபடியாக தமிழர்கள்தான் அதிகமாக புலம் பெயர்ந்துள்ளார்கள். இந்தியாவுக்கு வெளியே ஒரு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் தங்களது தாய்மொழி தமிழ் என்பதை வெளிப்படையாக அறிவிப்பதில்லை. இதனால்தான் தமிழ்மொழிக்கு உலக அளவில் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காமல் உள்ளது” என்றார்.

 

மேலும், ``உலக அளவில் எந்தெந்த மொழிகள் செல்வாக்கு பெற்றவை என யுனெஸ்கோ நிறுவனம் ஆய்வு நடத்தியது. அதில் தமிழ் 14-வது இடத்தில் உள்ளது. முதல் 10 இடத்துக்குள் தமிழைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம். முதல் முயற்சியாக உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து உலக தமிழ்ச் சங்கத்தை உருவாக்கப்போகிறோம். இது மறைந்த தமிழக முதலைச்சர் ஜெயலலிதாவின் விருப்பம். தமிழ் மொழியின் மேன்மையை உணர்த்துவிதமாக 36 இடங்களில் தமிழ் அருங்காட்சியம் உருவாக்கப் போகிறோம். நவீன கால மாற்றத்துக்கு ஏற்ப புதிய சொற்களை உருவாக்குவதற்காக, உலக அளவில் ஆயிரம் நபர்களை உள்ளடக்கிய சொக்குவை என்ற அமைப்பை தமிழ அரசு உருவாக்கியுள்ளது. கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதுவரை 700 நபர்கள் இதில் இடம்பெற்றுள்ளார்கள். இன்னும் 300 நபர்களை இணைப்பதற்கான முயற்சிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த்துறையை உருவாக்கி, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுமே தமிழை வளர்த்துள்ளன. இந்த முயற்சி இன்னும் வேகமெடுக்கும்” என தெரிவித்தார். பெருந்தன்மையுடன் இப்படிப் பேசுகிறாரா. பேச்சு வாக்கில் வாய்த்தவறி தி.மு.க-வையும் சேர்த்து குறிப்பிட்டாரா என தமிழர் அறிஞர்கள் தங்களுக்குள் விவாதித்துக்கொண்டார்கள்.