`தொண்டர்கள் அமைதி காக்க ஸ்டாலின் வேண்டுகோள்' - ஆ.ராசா மீண்டும் மருத்துவமனை வருகை! | Karunanidhi's family members at Cauvery hospital

வெளியிடப்பட்ட நேரம்: 21:36 (29/07/2018)

கடைசி தொடர்பு:02:35 (30/07/2018)

`தொண்டர்கள் அமைதி காக்க ஸ்டாலின் வேண்டுகோள்' - ஆ.ராசா மீண்டும் மருத்துவமனை வருகை!

திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருக்கிறார். அவரது உடல்நிலை சீராகி வருகிறது என  காவேரி மருத்துமனை சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

 கருணாநிதி

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வயது மூப்பின் காரணமாக உடல்நலிவு ஏற்பட்டதாக இரண்டுநாட்களுக்கு முன்பு காவேரி மருத்துவமனையிலிருந்து அறிக்கை வெளியானது. அறிக்கையை தொடர்ந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவரவர்கள் கோபாலபுரத்துக்கு வருகை புரிந்தனர். அவர்கள் வருகையை அடுத்து சில மணி நேரங்களிலே கோபாலபுரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஏராளமான தொண்டர்கள், தி.மு.க தலைவரின் உடல்நலம் குறித்து அறிந்து கொள்வதற்காக கோபாலபுரம் இல்லம் முன்பு குவிந்தனர்.

இந்த நிலையில், ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக கோபாலபுரம் இல்லத்திலிருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவருக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனால் திமுக தொண்டர்கள் நிம்மதியடைந்தனர். இந்நிலையில் தற்போது கருணாநிதியை பார்க்க அவரது குடும்ப உறுப்பினர்கள் காவேரி மருத்துவமனையில் குவிய தொடங்கியுள்ளனர்.

ஸ்டாலின், ராஜாத்தியம்மாள், கனிமொழி, உதயநிதி என அனைவரும் மருத்துவமனை வந்துள்ளனர். இதேபோல் தொண்டர்களும் அதிகளவில் குவிந்துள்ளனர். இதனால் கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. 

இதற்கிடையே, காவேரி மருத்துவமனையில் இருந்து வெளிநபர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும் மருத்துவமனை வளாகத்தில் திமுக முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்திற்குள் தொண்டர்கள், பொதுமக்கள் செல்லாதபடி தடுப்பு சுவர்களை அமைத்து பொதுமக்களை கட்டுப்படுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், '' கருணாநிதி நலமாக இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. தற்காலிக பின்னடைவு ஏற்பட்டாலும், அவரது உடல்நலம் சீராகி வருகிறது. மருத்துவர்கள் தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து ஆ.ராசா மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``கருணாநிதி உடல்நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் மருத்துவமனை அளித்த சிகிச்சை காரணமாக பின்னடைவு சீர்செய்யப்பட்டுவிட்டது. இதனால் அவர் நல்ல நிலையில் இருக்கிறார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்" எனக் கூறினார். முன்னதாக க.அன்பழகன் மருத்துவமனைக்கு வந்தார்.

திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவரும் மருத்துவமனையை விட்டு வெளியேறுகின்றனர். பேராசிரியர் க.அன்பழகன் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். தொண்டர்கள் கலைந்து செல்லுமாறு ஆ.ராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொண்டர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால் பதற்றமான சூழ்நிலை வருகிறது. தொண்டர்களை கலைக்க போலீஸார் முயன்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள ஸ்டாலின், உதயநிதி, துர்கா ஸ்டாலின், ராஜாத்தியம்மாள், தயாநிதி மாறன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர். இதேபோல் துரைமுருகன்,ஜெ.அன்பழகன் உள்ளிட்ட அனைவரும் மருத்துவமனையை விட்டு வெளியேறினர்.

அழகிரி, கனிமொழி உள்ளிட்டோரும் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.அழகிரி, ``அப்பா நலமாக இருக்கிறார்.அவருடன் பேசிவிட்டு தான் வருகிறேன். அவர் நலமாக உள்ளதால் தான் வீட்டுக்கு கிளம்பி செல்கின்றோம்" என்றார்.

இதேபோல் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசிய போது, ``கருணாநிதி நலமாக இருக்கிறார். அவர் உடல்நிலை சீராகி வருகிறது" என்றார். இதற்கிடையே, தொண்டர்கள் - போலீஸ்காரர்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது நடந்த கல்லெறி சம்பவத்தில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

திமுக தொண்டர்களுக்கு முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கருணாநிதிக்கு எதிர்பாராத பின்னடைவு ஏற்பட்டு பின்னர் தீவிர சிகிச்சையால் கருணாநிதி உடல்நிலை சீராகி வருகிறது. மருத்துவர்கள் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். எனவே தொண்டர்கள் எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம்கொடுக்காமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சிறிது நேரத்துக்கு பின்பு ஆ.ராசா, எ.வ.வேலு ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு மீண்டும் வந்தனர். தொண்டர்கள் நீண்ட நேரமாகியும் அங்கே காத்திருக்கின்றனர். அவர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் கருணாநிதியை பார்ப்பதற்காக காவேரி மருத்துவமனை வந்துள்ளார்.

கோபாலபுரம் இல்லம் முன்பு இருந்த தொண்டர்கள் கலைந்துசெல்கின்றனர். மருத்துவமனை விளக்கம், ஸ்டாலின் வேண்டுகோளை அடுத்து கோபலாபுரம் இல்லம் முன்பு கூடியிருந்த தொண்டர்கள் கலைந்துசெல்கின்றனர்.

இரவு 2 மணியளவில் காவேரி மருத்துவமனைக்கு சென்னை மாநகர காவல் ஆணையர்  ஏ.கே.விஸ்வநாதன் வந்தார். தொண்டர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதால் பாதுகாப்பு பணிகள் குறித்து  ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு செய்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க