வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (30/07/2018)

கடைசி தொடர்பு:12:48 (30/07/2018)

`காட்டு யானை எப்போதுவரும் என்றே தெரியாது'- கும்கி யானை கலீம் வருகையால் மக்கள் நிம்மதி

தேனி மாவட்டம், தேவாரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள தோட்டங்களில் பல மாதங்களாக சுற்றித்திரியும் ஒற்றைக் காட்டுயானையைப் பிடிக்க பொள்ளாச்சியில் இருந்து கலீம் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

கும்னி யானை

தேவாரம் பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டுயானையால் பல நூறு ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்துவந்த விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மேலும், ஒற்றைக்காட்டு யானை தாக்கி சிறுவன் உட்பட இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், காட்டுயானையைப் பிடித்து வேறு இடத்தில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் காட்டு யானை குறித்து வனத்துறையினர் ஆய்வில் இறங்கினர். முடிவில், கும்கி யானை உதவியுடன், காட்டு யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு, பொள்ளாச்சியில் இருந்து கலீம் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், ``இப்போது கலீம் என்ற கும்கி யானையை வரவழைத்திருக்கிறேன். இன்னொரு கும்கி யானை கேட்டிருக்கிறோம். அதை வரவழைக்கும் முயற்சியில் இருக்கிறோம். இரண்டு கும்கி யானைகளை, காட்டு யானை வரும் வழியில் நிறுத்திவைக்க முடிவு செய்திருக்கிறோம்’’ என்றார். இது தொடர்பாக தேவாரம் பகுதி மக்கள் கூறும்போது, ``மாலை 6 மணிக்கு மேல் தோட்டங்களுக்குச் செல்ல முடியாது. காட்டு யானை எப்போதுவரும் என்றே தெரியாமல், அச்சத்தில் இருப்போம். கும்கி யானை வந்திருப்பது ஆறுதலாக உள்ளது. ஒற்றைக் காட்டுயானையைப் பிடித்து வேறு இடத்தில் விட வேண்டும். அல்லது, மீண்டும் இப்பகுதிக்கு வராத தூரத்தில் அதை துரத்திவிட வேண்டும்’’ என்றனர். தற்போது, தேவாரம் மலையடிவாரத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் கலீம் கும்கி யானை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கும்கி யானை வந்திருப்பதால் தேவாரம் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.