‘இட்ஸ் மெடிக்கல் மிராக்கிள்’ - கருணாநிதி குறித்து வைகோ பேட்டி

‘மருத்துவர்களின் சிகிச்சையையும் தாண்டி, தானாக மீண்டுவிட்டார் கருணாநிதி’ என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

வைகோ

தி.மு.க தலைவர் கருணாநிதி, உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 27-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ' தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிகப் பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், சிறப்பான மருத்துவ சிகிச்சைமூலம் அவரது உடல்நிலை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. அவருடைய உடல்நிலை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டுவருகிறது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.  நேற்றிரவு, அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பின் பழைய நிலைக்குத் திரும்பினார். இது, அதிசயமான ஒன்றுதான். இத்தனை வயதில் அவரது உடல் ஒத்துழைப்பது ஆச்சர்யத்தைக்கொடுக்கிறது என மருத்துவர்களே வியந்ததாகக் கூறப்பட்டது. 

இந்நிலையில், இன்று காலை காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதியின் உடல்நிலைபற்றி குடும்பத்தாரிடம் கேட்டு அறிந்துகொண்டார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. அதன்பின், மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உண்மையிலேயே இது மெடிக்கல் மிராக்கிள். நேற்று, மருத்துவர்கள் அளித்த சிகிச்சையையும் தாண்டி தன் மன தைரியத்தின் மூலம் தானாக மீண்டுவிட்டார் என்பது உண்மையிலேயே ஒரு அதிசயம். தன் வாழ்நாள் முழுவதும் தமிழரின் நலனுக்காகவும் தமிழரின் உரிமைக்காகவும் பல போராட்டங்களைச் செய்து சிறைவாசம் கண்டுள்ளார். இப்போது அவர், எமனுடன் போராடி வருகிறார். எமனையும் ஜெயித்து மீண்டு வருவார்'' என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!