வெளியிடப்பட்ட நேரம்: 16:11 (30/07/2018)

கடைசி தொடர்பு:17:10 (30/07/2018)

 ``நல்ல இணக்கமும்... உறவுமே சமூக மத நல்லிணக்கத்தின் நோக்கம்!'' - ஈ.ஆர்.ஈஸ்வரன்

சமூக மத நல்லிணக்கம் குறித்து கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசிய கட்டுரை...

 ``நல்ல இணக்கமும்... உறவுமே சமூக மத நல்லிணக்கத்தின் நோக்கம்!'' - ஈ.ஆர்.ஈஸ்வரன்

``சமூக மத நல்லிணக்கம் என்கிற பெயரில் மாநாடு நடத்துபவர்கள், சமூகங்களுக்கிடையே நல்ல இணக்கத்தையும் உறவையும் ஏற்படுத்துவதுதான் அதன் நோக்கமாக இருக்க வேண்டும்'' என்று பேசியுள்ளார், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன். 

ஈ ஆர் ஈஸ்வரன்

 

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் சார்பில் சமூக மத நல்லிணக்க மாநாடு நேற்று இரவு (29-ம் தேதி) கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இளைஞர் அணிச் செயலாளர் சூர்யமூர்த்தி, கொள்கைப் பரப்புச் செயலாளர் அசோகன், பேரவைத் தலைவர் தேவராஜன், பொருளாளர் கே.கே.சி.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் தங்கவேல், சக்தி நடராஜன், அவைத்தலைவர் பி.ஆர்.டி.சென்னியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டை மாநாட்டுக்குழு தலைவர் அண்ணாதுரை, செயலாளர்கள் வஜ்ரவேலு, செல்வராஜ், உறுப்பினர்கள் செல்வராஜ், வரதராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். 

மாநாட்டில் பேசிய ஈ.ஆர்.ஈஸ்வரன், ``சில சமூகங்கள் பிரச்னையைக் கொச்சைப்படுத்திப் பேசுவதுதான் அவர்களுடைய பேச்சாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் அல்ல நாம். இங்கே சூரியமூர்த்தி சொன்னதுபோல அனைத்துச் சமூகத்தையும் அரவணைத்துச் சென்றவர்கள் நாம். அப்படிப்பட்டவர்கள் இன்றைக்குச் சமூகத்தை இயக்க வேண்டும் என்று சொன்னால், சாதிகளுக்கிடையே இணக்கம் வேண்டும்; மதங்களுக்கிடையே இணக்கம் வேண்டும்; மொழிகளுக்கிடையே இணக்கம் வேண்டும்; பணக்காரன் - ஏழை என்ற பிரிவினருக்கிடையே இணக்கம் வேண்டும். கறுப்பு - வெள்ளை என்ற நிறத்தினருக்கிடையே இணக்கம் வேண்டும்; ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே இணக்கம் வேண்டும். இப்படி இத்தனை பிரிவுகளிலே ஓர் இணக்கம் ஏற்பட்டால்தான் சமூகம் மாறும். சாதி மாறி இருவர் திருமணம் செய்துகொண்டால் இணக்கம் வந்துவிடாது. அடுத்த சமுதாயத்தினரின் பிரச்னைகளைக் கொச்சைப்படுத்துவது, அடுத்த சமுதாயத்தினரின் திருமணச் சடங்குகளைக் கேவலமாகப் பேசுவது... இப்படியெல்லாம் இருந்தால் சமூகங்களுக்குள் இணக்கம் வருமா? இப்படியெல்லாம் இருந்தால் சமூகங்களுக்குள் ஒரு குழப்பம் வருமா? சில சமூகங்களைத் திட்டினால் அல்லது சில சமூகங்களைக் கேவலப்படுத்தினால் இணக்கம் வருமா? 

சமூக மத நல்லிணக்கம் என்கிற பெயரில் பலர் மாநாடுகள் நடத்தியுள்ளனர். அப்படி நடத்தப்படும் மாநாடுகளில் சமூகங்களுக்கிடையே நல்ல இணக்கத்தையும் உறவையும் ஏற்படுத்துவதுதான் அதன் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் இதுவரை அப்படி மாநாடு போட்டவர்கள், மாநாட்டு மேடையில் சில சமூகங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவதும், தொன்றுதொட்டு வருகிற அவர்களுடைய பழக்கவழக்கங்களைப் பேசுவதும் வாடிக்கையாகி வருகிறது. இது, சமூகங்களுக்கிடையே பகை உணர்ச்சியை ஏற்படுத்துமே தவிர, நட்புறவை ஏற்படுத்தாது. கலப்புத் திருமணம் மட்டும்தான் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் என்று பேசுவதில் எதிர்மறையான விளைவுகள்தான் ஏற்படச் செய்யும். ஒரு திருமணம் மட்டுமே சமூகங்களுக்கிடையே உறவுகளை ஏற்படுத்திவிடாது. அதேபோல் உச்ச நீதிமன்றம், `வன்கொடுமைச் சட்டத்திலே விசாரித்து கைது செய்ய வேண்டும்' என்று சொன்ன தீர்ப்பை... சமூக மத நல்லிணக்கத்துடைய சமூக மத நல்லிணத்துக்கான பயணமாகப் பார்க்கிறேன். இந்தியா முழுவதும் வன்கொடுமைச் சட்டத்தில் பொய் வழக்குகள் போடப்படுவதுதான் பல சமூகங்களுக்கிடையே பகையை வளர்க்கக் காரணமாக இருந்திருக்கிறது என்கிற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றவர்கள் நாம்.

பல இயக்கங்கள், பல அரசியல் இயக்கங்கள் அந்தத் தீர்ப்பை மாற்றி எழுத வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடக்கூடச் செய்தார்கள். அவர்கள் எல்லாம் சமூக நல்லிணக்கத்தை விரும்பாதவர்கள் என்றுதான் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இந்தச் சமூகத்தில் சமுதாயங்களுக்கிடையே உறவுகள் மலர வேண்டும் என்று சொன்னால், கலப்புத் திருமணத்தைத் தாண்டி மற்ற காரணிகளை ஆராயவேண்டும். ஒரு சமுதாயத்தைத் தாங்கிப் பிடிக்கிறோம் என்று சொல்பவர்கள், அந்தச் சமுதாயத்தில் இருக்கிறவர்களை,  ஏழை மக்களை முன்னேற்றுவதற்கு மாற்ற முயற்சிக்க வேண்டும். இப்போதிருக்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளே ஒரே சமூகத்துக்குள் நல்லிணக்கத்தைக் கெடுப்பதாக இருக்கிறது. ஒரே சமூகத்துக்குள் இருப்பவர்கள் இணக்கமாக வாழவேண்டும் என்றால், இடஒதுக்கீட்டுக் கொள்கைகளில்கூடச் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளாக அனுபவித்தவர்கள் நன்கு படித்தவர்களாகவும், வசதியானவர்களாகவும் மாறியிருக்கிறார்கள். அந்தக் குடும்பத்தின் குழந்தைகளும், அதே சமுதாயத்தைச் சார்ந்த பின்தங்கிய குழந்தைகளும் ஒரே தளத்தில் போட்டிபோட வேண்டுமென்றால், அது ஒரு சமமான நீதியாக இருக்காது. இதை மாற்றுவதற்கு சமூக நீதியின் அடிப்படையில், அந்தந்த சாதிக்குரிய இடஒதுக்கீட்டில் எந்தப் பாதிப்பும் இல்லாமல், அந்தந்த சாதிக்குள் இருக்கிற இடஒதுக்கீட்டால் பயனடையாத ஏழைக் குடும்பங்களுக்குப் பயனளிக்கிற வகையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்'' என்றார். 

நல்ல இணக்கமும்... உறவும் சரியாக இருந்தால், சமூக மத நல்லிணக்கத்தின் நோக்கமும் சரியாக இருக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க