குறுகிய காலத்தில் தொழிலதிபர்! - புதுச்சேரி அமைச்சரின் ஆதரவாளர் படுகொலை | Minister's supporter murdered in Puducherry

வெளியிடப்பட்ட நேரம்: 16:09 (30/07/2018)

கடைசி தொடர்பு:16:15 (30/07/2018)

குறுகிய காலத்தில் தொழிலதிபர்! - புதுச்சேரி அமைச்சரின் ஆதரவாளர் படுகொலை

புதுச்சேரி அமைச்சரின் ஆதரவாளரும், புதுச்சேரி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜோசப், மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

படுகொலை

புதுச்சேரி காலாப்பட்டில், ‘ஷாசன் கெமிக்கல்ஸ்’ என்ற தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் மற்றும் குடிநீர் மாசுபடுவதோடு, நிலத்தடி நீரும் அளவுக்கதிகமாக உறிஞ்சப்படுகிறது என்ற குற்றச்சாட்டோடு, இந்த தொழிற்சாலையை மூட வேண்டும் என்று பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கிடையில், உற்பத்தியின் அளவை அதிகரிக்கவும், தொழிற்சாலையை விரிவாக்கவும் புதுச்சேரி அரசிடம் அனுமதி கேட்டது அந்தத் தொழிற்சாலை நிர்வாகம். அதையடுத்து, கடந்த மே மாதம் 8-ம் தேதி அப்போதைய புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் சத்தியேந்திரசிங் துர்சாவத் தலைமையில், காலாப்பட்டு பகுதி மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

துப்பாக்கி சூடு

ஆனால், கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே “கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டாம். தொழிற்சாலையை உடனே மூடுங்கள்” என்று பொதுமக்கள் கூச்சலிட்டதால், கூட்டத்தை நடத்தாமல் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினார்கள். குறிப்பிட்ட தனியார் தொழிற்சாலைக்கு எதிராக அதிகாரிகளிடம் பொதுமக்கள் கொந்தளித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில், அந்தத் தொழிற்சாலைக்கு ஆதரவாக புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் ஜோசப் தலைமையில் 200 பேர் பேரணியாக அந்தப் பக்கம் வந்தனர். அப்போது, இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு ஒரு கட்டத்தில் கலவரமாக மாறியது. இதையடுத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்படியும் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைத்து கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதைத் தொடர்ந்து, காலாப்பட்டு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போதுவரை அந்த உத்தரவு அப்பகுதியில் அமலில் இருக்கிறது.

புதுச்சேரி அமைச்சரின் ஆதரவாளர் ஜோசப் படுகொலை

இந்நிலையில்தான் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் ஜோசப் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இன்று  மதியம் சுமார் 12 மணியளவில், தனது இருசக்கர வாகனத்தில் புதுச்சேரியிலிருந்து காலாப்பட்டு நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, பெரிய முதலியார் சாவடி எனும் இடத்தில் தலையில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், ஜோசப்பை வழிமறித்து, அவரது கழுத்தில் அரிவாளால் வெட்டியுள்ளனர். அதில் நிலைதடுமாறி ஜோசப் கீழே விழ, மீண்டும் அவரது கழுத்திலேயே துள்ளத்துடிக்க வெட்டிச் சாய்த்துவிட்டு  தப்பிச் சென்றுவிட்டனர். சம்பவ இடத்திலேயே ஜோசப் துடிதுடித்து உயிரிழந்தார். உடனே அப்பகுதி மக்கள் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர் மருத்துவர்கள்.

முதல்வர் நாராயணசாமி

“ஷாசன் கம்பெனி கான்ட்ராக்ட்டுகள் அனைத்தையும் வாங்கியதோடு, ஏராளமான சட்டவிரோதத் தொழில்களையும் செய்து, குறுகிய காலத்திலேயே தொழிலதிபர் ஆனவர் இந்த ஜோசப். அதனால், அவருக்கு தொழில்போட்டியால் நிறைய எதிரிகள் உருவானார்கள். இந்தக் காரணங்களால்தான் கூலிப்படைமூலம் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்” என்கின்றனர் அப்பகுதி மக்கள். இந்தக் கொலைகுறித்து கோட்டகுப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம்குறித்து விசாரணை செய்துவருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஜோசப், போக்குவரத்து மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகானின் தீவிர ஆதரவாளர். தகவல் அறிந்ததும் முதல்வர் நாராயணசாமி, அரசு மருத்துவமனைக்குச் சென்று  ஜோசப்பின் உறவினர்களுக்கு ஆறுதல் சொன்னார். ஜோசப்பின் உறவினர்கள், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமியைச் சந்தித்து கதறி அழுதனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க