வெளியிடப்பட்ட நேரம்: 16:32 (30/07/2018)

கடைசி தொடர்பு:16:32 (30/07/2018)

`சிலை திருட்டுக்கு யார் காரணம்?’ - பின்னணியை விவரிக்கும் `யானை’ ராஜேந்திரன்

சிலைக் கடத்தல் வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளநிலையில், அதன் பின்னணிகுறித்து சமூக ஆர்வலர் யானை ராஜேந்திரன் பல்வேறு  தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

சிலை திருட்டு

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சிலைக் கடத்தலைத் தடுக்கும் வகையில், 'கோயில்களில் பாதுகாப்பு அறைகள் அமைக்க வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் 2021 வரை கால அவகாசம் கோரப்பட்டது. இதற்கு, நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இந்த நிலையில், இன்றைய வழக்கு விசாரணையின்போது, 2019-ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்படும் என அரசு தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்த சமூக ஆர்வலர் யானை ராஜேந்திரனைத் தொடர்புகொண்டு பேசினோம். ``1959-ம் ஆண்டு, சிலைக் கடத்தல் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. இதுவரை ஆயிரக்கணக்கான சிலைகள் திருப்பட்டுள்ளன. நான் வழக்கு தொடர்ந்த ஓராண்டில் மட்டும் 80 சிலைகள் திருடப்பட்டுள்ளன. இதுக்கு அடிப்படை காரணம் சம்பந்தபட்ட கோயிலின் நிர்வாக அதிகாரி மற்றும் அர்ச்சகர். கோயிலின் சிலைகளைப் பாதுகாத்து, எத்தனை சிலைகள் உள்ளன என்பதை கணக்கு வைத்துக்கொள்பவர்கள் இவர்கள்தான். ஒரு சிலையைக் கோயிலிலிருந்து எடுக்க வேண்டுமென்றால், அதைத் தினமும் பூஜை செய்யும் அர்ச்சகருக்குத் தெரியாமலோ நிர்வாக அதிகாரிக்குத் தெரியாமலோ எடுக்க முடியாது.

கோயில்

யானை ராஜேந்திரன்இருவரிடமும் ஒவ்வொரு சாவி கொடுக்கப்பட்டிருக்கும்; அவர்கள் சேர்ந்து திறந்தால்தான், கோயில் கதவைத் திறக்க முடியும். இதில், கோயில்களில் கதவுகள் உடைக்கப்பட்டு திருடப்படுவதென்பது வெறும் 10 சதவிகிதம் மட்டும்தான். ஆனால், மீதி 90 சதவிகிதம் சிலைகள், கோயில் நிர்வாக அதிகாரி மற்றும் கோயில் அர்ச்சகர் அனுமதியுடன்தான் நடைபெறுகிறது. ஆனால், பெரும்பாலும் சிலை திருடுபவர் சம்பந்தபட்ட அர்ச்சகரைத் தொடர்புகொண்டு, அவரிடம் குறிப்பிட்ட தொகையைக் கொடுப்பதாகக் கூறி, ஆசை வார்த்தைகள் பேசி சிலையைத் திருடிவிடுகிறார். திருடப்பட்ட சிலையைப் போலவே, போலி சிலைகள் செய்ய ஏராளமான ஆட்கள் உண்டு. அவர்களை வைத்துக்கொண்டு போலி சிலையைத் தயாரித்து, திருடப்பட்ட சிலை இருந்த இடத்தில் இதை வைத்துவிடுகின்றனர். அதனால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படுவதில்லை. விருத்தாசலத்தில் சமீபத்தில் இப்படித்தான் நடந்தது. இதனால் விஷயம் வெளியே தெரியாது. முன்னரே கூறியதுபோல கோயில் கதவுகள் உடைக்கப்பட்டு, சிலை திருடும்போது அர்ச்சகரோ அதிகாரிகளோ சிலை திருடு போனதாகப் புகார் அளிப்பதில்லை, கும்பகோணம் மாவட்டம் அருகில் உள்ள கோணகிரி ராஜபுரத்தில் இருந்த அன்னபூரணி சிலை காணாமல் போனது. நான் அது தொடர்பாகப் புகார் அளித்தேன். அந்தச் சிலை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டோம். ஆனால், அதை மீட்க முடியவில்லை; காரணம் அது தொடர்பாகப் புகார் அளிக்கப்படாததால், சட்டரீதியாகச் சிலையை உரிய கோயிலில் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல 110 சிலைகள் உள்ளன. அது எந்தக் கோயிலைச் சேர்ந்த சிலைகள், யாரிடம் ஒப்படைப்பது என்பது தெரியாமல் தத்தளிக்கும் சூழல் உள்ளது. இந்தச் பிரச்னைக்கு முக்கிய காரணம், திருடப்படும் சிலைகள் குறித்து புகார் கோயில் நிர்வாகமோ அரச்சகரோ புகார் அளிக்காமல் மறைப்பதுதான். இஸ்லாமிய படையெடுப்பின்போது தென்னாட்டில் எடுத்துச் செல்லபட்ட சிலைகள் 1 சதவிகிதம் மட்டும்தான். ஆனால், இந்து அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டுக்கு சிலைகள் வந்த பிறகு, 500 சதவிகிதம் சிலைகள் திருடு போயுள்ளன."