வெளியிடப்பட்ட நேரம்: 17:18 (30/07/2018)

கடைசி தொடர்பு:17:54 (30/07/2018)

என்னாச்சு தா.பாண்டியனுக்கு... இப்போது எப்படி இருக்கிறார்?

என்னாச்சு தா.பாண்டியனுக்கு... இப்போது எப்படி இருக்கிறார்?

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்ற செய்தியைக் கேட்டதும் கடந்த வாரம் கோபாலபுரம் வீட்டுக்கு நேரில் வந்து நலம் விசாரித்தவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். 85 வயதைக் கடந்துவிட்டபோதும் கட்சிக் கூட்டங்கள், போராட்டங்கள் என்று தளராமல் செயல்பட்டு வருகிறார். ஆனாலும்கூட வயது மூப்பின் காரணமாகத் தா.பாண்டியனுக்கும் சிற்சில உடற்கோளாறுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று காலையில், திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரி குடும்பத்தினர் சென்னை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கே தா.பாண்டியனை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சையைத் தொடர்ந்துள்ளனர்.

தா.பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்ததும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துவருகின்றனர். 

தா பாண்டியன் - மு.க.ஸ்டாலின்

இதுகுறித்துப் பேசும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏழுமலை, ''சனிக்கிழமை காலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தோம். இங்கே அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுநீரகம் புரோட்டீனை ஏற்க மறுப்பதால், பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறினர். உடனடியாக டயலிஸிஸ் செய்யப்பட்டது. தற்போது அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒன்றிரண்டு நாள்களில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்றே தெரிகிறது'' என்றார். 

''கடந்த சில மாதங்களாகக் கால்களில் வீக்கம் ஏற்பட்டு ரொம்பவே சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். சமீபத்தில், கால் வீக்கம் அதிகமாகிவிட்டதால், வெளி நிகழ்ச்சிகளைக் குறைத்துக்கொண்டு வீட்டிலேயே ஓய்வு எடுத்துவந்தார். 

இந்த நிலையில்தான், கருணாநிதி உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது. உடனடியாகக் கோபாலபுரம் சென்று, மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் நலம் விசாரித்தார்.

மதுரையில், கல்லூரி மாணவனாக இருந்த காலத்திலேயே கருணாநிதியின் பேச்சை ரசித்துக் கேட்டவர் ஐயா. பின்னர், அரசியலுக்குள் வந்த பிறகு, கருணாநிதியோடு நெருக்கமாகப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. ஐயாவின் தமிழ்ப் பேச்சு, கருணாநிதிக்கும் ரொம்பவே பிடிக்கும். அதனாலேயே, கட்சி வேறுபாடுகளையும் தாண்டி இலக்கியக் கூட்டங்களில், தா.பாண்டியனையும் அழைத்துப் பேச வைத்து அழகு பார்ப்பார் கருணாநிதி. ஐயாவின் பிள்ளைகள் மூவருக்கும் கருணாநிதியின் தலைமையில்தான் திருமணம் நடைபெற்றது. 

தா.பாண்டியன் - வைகோ

கடந்த வெள்ளிக்கிழமையே, பாராட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக ஐயா மதுரைக்குச் செல்ல வேண்டியிருந்தது. முன்னரே திட்டமிடப்பட்டிருந்த இந்நிகழ்ச்சிக்காக ஐயாவுக்கும் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் அன்றைய தினம் திடீரென கருணாநிதிக்கு உடல் நலம் குன்றிவிட்டது. இதையடுத்து உடனடியாக ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார். அப்போது, 'நீங்களும் உடம்பைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை வெளியூர் அலைச்சல்களைக் குறைத்துக்கொள்ளுங்கள்' என அக்கறையோடு ஐயாவிடம் எடுத்துரைத்தார் ஸ்டாலின்.  

பின்னர், வீட்டுக்குத் திரும்பிய பிறகும்கூட ஐயாவுக்கு கருணாநிதியின் உடல்நிலை குறித்த கவலை இருந்தது. இந்தச் சூழ்நிலையில், மதுரைக்குச் சென்று பாராட்டு விழாவில் கலந்துகொள்வதும், அதுபற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளிவருவதும் நன்றாக இருக்காது' என்று எண்ணியவர், உடனடியாக விழா அமைப்பினரிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இதே சிந்தனையில், மன பாரத்துடன் இரவு தூக்கத்துக்குச் சென்றவருக்குத் திடீரென காலையில், மூச்சுத் திணறல் ஏற்பட்டுவிட்டது. அதன் பிறகுதான் மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தோம்'' என்கிறார்கள் தா.பாண்டியன் குடும்பத்தினர்.

நண்பர்கள் இருவரும் பூரண நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும்!


டிரெண்டிங் @ விகடன்