பெண் கலைஞர்களின் ஒருநாள் ஷாப்பிங் ஸ்பெஷல்! #LuxeBazaar

பெண் கலைஞர்களின் ஒருநாள் ஷாப்பிங் ஸ்பெஷல்! #LuxeBazaar

ஆண்-பெண் இருவரும் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவதில் இருக்கும் தயக்கம், முந்தைய தலைமுறையினரோடு முடிந்தது. கிடைக்குற சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொள்கின்றனர் தற்போதுள்ள தலைமுறையினர். அதற்கு ஒருவகையில், இன்றைய தலைமுறையினருக்கு வாய்ப்புகள் அதிகம் குவிந்துள்ளன என்பதும் காரணம். அந்த வகையில் சமீபத்தில் 'Luxe Bazaar' எனும் பாப்-அப் ஈவென்ட், சென்னை அமிதிஸ்ட் உணவகத்தில் நடைபெற்றது. இதில், இந்தியாவெங்கிலும் இருந்து சிறுதொழில் செய்யும் படைப்பாளிகள், தங்களின் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தனர். உணவு, உடை, ஆபரணங்கள், கைவினைப்பொருள்கள் என அனைத்திலும் புதுமை நிறைந்திருந்தது. அத்தனையும் பெண் தொழில்முனைவோர்கள் என்பதால் கூடுதல் அழகு!

உடை

ஏதோ சாதாரண பொருட்காட்சிபோல் இதைக் கடந்துவிட முடியாது. சுமார் 30 கடைகள் நிரம்பிய அரங்கு அது. அனைத்து கடைகளிலும் பெண்களையே காண முடிந்தது. ஆங்காங்கே குழந்தைகளை சுமந்தபடி சில ஆண்கள் நடமாடிக்கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. அவர்கள் வாடிக்கையாளர்கள் அல்ல. மனைவியை ஊக்குவிக்கும் கணவர், தாயை ஊக்குவிக்கும் மகன் என தங்கள் வீட்டு ஆண்கள் அத்தனை உற்சாகமாய் பெண்களுடன் இருப்பதைப் பார்க்க நெகிழ்ச்சியாக இருந்தது.

அத்தனை கடைகள் இருந்தாலும் ஆடை ஆபரணங்கள் கடைகளை நோக்கியே என் கால்கள் பயணித்தது. வெவ்வேறு மாநிலத்திலிருந்து வந்த பெண்கள், தங்களின் வேலைப்பாடுகளை மிகவும் ஆர்வத்துடன் பார்வையாளர்களுக்கு காண்பித்துக்கொண்டிருந்தனர். ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என ஆயிரம் மொழிகள் இருந்தாலும், தமிழில் 'வாங்க' என்று என் காதில் விழுந்த அடுத்த நொடி அந்தப் பெண்ணின் கடைக்குச் சென்றேன். வண்ணவண்ண ஓவியங்களுடன் முகத்தில் புன்னகையுடன் அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருந்த அவரிடம் பேசினேன்.

``இத்தனை நாளா இயக்குநர் கணேஷாவோட மனைவின்னுதான் எல்லாரும் சொல்லுவாங்க. இனிமே, கவிதானு சொல்ல ஆரம்பிப்பாங்க" என்று உற்சாகமாய் தொடங்கினார் 'நம்பியார்' பட இயக்குநர் கணேஷாவின் மனைவி கவிதா.

Kavitha and Family


"எத்தனை வருஷமா இந்த ஓவியங்களை வரைஞ்சிட்டு இருக்கீங்க?"
"வருஷமலாம் இல்லை. 4 மாசம்தான். ரொம்ப நாளாவே எனக்கு பெயின்டிங் பண்ணனும்னு இன்டரெஸ்ட். என் கணவர்கிட்டயும் சொல்லிட்டே இருப்பேன். அவரும் வேலை விஷயமா பிஸியாவே இருந்துட்டார். ஆனாலும், எனக்குள்ள இருந்த வேகம் குறையவே இல்லை. கண்டிப்பா ஏதாவது பண்ணனும்னு தோணிட்டே இருந்துச்சு. பெயின்டிங் கத்துக்க ஆரம்பிச்சேன். நாலு மாசம்தான் ஆச்சு, இப்படி ஒரு பாப் அப் ஷோனு சொன்னாங்க. கண்டிப்பா, கலந்துக்கணும்னு நினச்சேன். இதுக்காக என்னை ஊக்கப்படுத்தினது என் கணவர்தான். அவரு சொன்ன வார்த்தைகளோடு பவர்தான், உள்ளுக்குள்ள இருந்த வெறி மொத்தமா ஓவியங்கள் மூலமா வெளில வந்துருச்சுனு நினைக்குறேன்" என்று உற்சாகமாய் கூறினார்.

Kavitha with her work


``இந்த ஒருநாள் பாப் அப் ஷாப் பயனுள்ளதா இருக்கா?"
``நிச்சயமா. என்னை மாதிரி இருக்கிற பல பெண்கள் இந்த ஷோல கலந்துருக்காங்க. வீட்டுலேயே இருந்தபடி குடும்பத்தையும் கவனிச்சிக்கிட்டு, அவங்களோட திறமையையும் கைவிடாம மேம்படுத்துறதுக்கு ரொம்பவே பயன்படுது. இன்னும் வெளில வராத எத்தனையோ திறமையாளர்கள் இருக்காங்க. அவங்களுக்கு ஒரு அடையாளம் கிடைக்குறதுக்கான முதல் முயற்சி இது" என்றார் கவிதா.

சமையலறை பெண்களுக்கானது அதிலும் வீட்டு சமயலறை மட்டும்தான், வீட்டை விட்டு வெளியில் வந்தால் அங்கு சமயலறையும் பெண்களுக்கானதல்ல. இப்படிப்பட்ட சூழ்நிலையை தகர்த்துவரும் இன்றைய தலைமுறையினருக்கு இதுபோன்ற நிகழ்வுகள் நிச்சயம் ஊக்குவிக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!