முதல்வர் வாகனத்தைப் பின்தொடர்ந்த நால்வர்..! கைதுசெய்து விசாரணை நடத்தும் காவல்துறை

முதல்வர் பாதுகாப்பு வாகனத்தைப் பின்தொடர்ந்து, அவரது வீடுவரை சென்ற 4 பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

முதல்வர் வாகனம்

சேலம் மாவட்டத்தில் பொருள்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் சென்றிருந்தார். ஆனால், திடீரென்று நேற்றிரவு கோயம்புத்தூர் சென்று அங்கிருந்து விமானம்  மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை வரும் முதல்வர் நேற்றிரவே, தி.மு.க தலைவர் கருணாநிதி சிகிச்சைபெற்றுவரும், காவேரி மருத்துவமனைக்குச் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியானது.  அதையடுத்து, சென்னை வந்த முதல்வர் நேராக கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்றார். அப்போது, சென்னை விமான நிலையத்திலிருந்து முதல்வர் கிளம்பும்போது, அவருடைய கான்வாய் வாகனத்தைப் பின்தொடர்ந்து கார் ஒன்று வந்தது.

குற்றவாளி

முதல்வர் வாகனத்தைப் பின் தொடர்ந்தால் விரைவில் சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் காரில் பயணித்த இளைஞர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். அப்போது, முதல்வரின் வாகனம் கிரீன்வேஸ் சாலையை அடைந்து, வீட்டுக்குள் நுழையும்போதும், பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள் திரும்பிச்செல்லாமல், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குள் நுழைய முற்பட்டனர். இதைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள், காரிலிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த கோவிந்த ராஜ், ரங்கதுரை, ராஜா, குன்றத்தூரைச் சேர்ந்த சதீஷ் உள்ளிட்ட நால்வரும் முதல்வரைப் பின் தொடர்ந்தது தெரிய வந்தது. மேற்கொண்டு நடத்திய விசாரணையில், `முதல்வர் காவேரி மருத்துவமனைக்குச் செல்வார் என எண்ணி, வாகனத்தைப் பின்தொடரந்தோம். இதில், தவறுதலாக முதல்வர் வீட்டுக்குள் நுழைந்துவிட்டோம்' என அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் நால்வரையும் போலீஸார் கைது செய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!