`ஆன்மிக பூமி பாலியல் வன்கொடுமை பூமியாகிவிட்டது’ - நீதிபதி கிருபாகரன் வேதனை!

ஆன்மிக பூமி, பாலியல் வன்கொடுமை பூமியாகிவிட்டதாக வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த காம மிருகங்கள், குழந்தைகளைக்கூட விட்டு வைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

நீதிபதி கிருபாகரன்

60 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி கிருபாகரன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தது தொடர்பாகப் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மேலும், மத்திய உள்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை காணொலிக்காட்சி மூலம் நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். அப்போது மத்திய அரசு தரப்பில் பதிலளிக்காததற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, அடுத்த விசாரணையின்போது, இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்காவிட்டால், மத்திய உள்துறை மற்றும் மாநில உள்துறை செயலாளர்களும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறைச் செயலாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி வரும் எனவும் எச்சரித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும், சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை குற்றச் சம்பவங்களை மேற்கோள்காட்டிய நீதிபதி, ஆன்மிக பூமி என்று அழைக்கப்பட்ட இந்தியா, தற்போது பாலியல் வன்கொடுமை பூமி என்ற அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்டது என வேதனை தெரிவித்தார். மேலும், இந்தக் காம மிருகங்கள், குழந்தைகளையும்கூட விட்டு வைக்கவில்லை என்றும், இதற்கு சமூகம் மற்றும் சம்பந்தப்பட்ட மனிதனின் உளவியல் ரீதியான பிரச்னைகளமே காரணம் எனவும் குறிப்பிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!