‘கடன் வாங்கச் சென்ற பெண் சடலமாக மீட்பு! - ஈரோட்டில் நடந்த பயங்கரம்!

கொலை

ஈரோட்டை அடுத்த சென்னிமலை அருகே, பணத்துக்காக அக்கா உறவுமுறை கொண்ட பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த முகாசிபிடாரியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் - சிந்து தம்பதியினர். ஆறுமுகம் பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் எலெக்ட்ரீஷியனாகவும், சிந்து சென்னிமலை பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் அலுவலகப் பணியாளராகவும் வேலைபார்த்து வந்துள்ளனர். தம்பதியினர் இருவருமே வேலைக்குப் போனாலும், அவ்வப்போது கடன் வாங்கியே குடும்பத்தை நடத்திவந்திருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, குடும்பச் செலவுக்காக ஆறுமுகம் தன்னுடைய உறவினரான தனசேகர் என்பவரிடம் 5 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டிருக்கிறார். ‘என்னிடம் இல்லை, வேறு யாரிடமாவது கேட்டு ஏற்பாடுசெய்து கொடுக்கிறேன்’ என தனசேகர் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, கடந்த ஜூலை 28-ம் தேதி காலை, ஆறுமுகத்துக்கு போன் செய்த தனசேகர், ‘தோப்புபாளையத்தில் நண்பர் ஒருவர் கடனாக பணம் தருகிறேன் என்கிறார். நீ அல்லது உன்னுடைய மனைவி என யாராவது வந்தால் வாங்கித் தருகிறேன்’ என கரிசனம் காட்டுவது போல் பேசியிருக்கிறார். வேலையை விட்டுவிட்டு வரமுடியாது என்பதாலும், தனசேகர் உறவினர் என்பதால் அவர் மேல் உள்ள நம்பிக்கையாலும், ‘என்னுடைய மனைவியை அழைத்துச்சென்று வாங்கி வா’ என ஆறுமுகம் கூறியிருக்கிறார்.

ஆறுமுகத்தினுடைய மனைவி சிந்துவை அவர் வேலைசெய்யும் அலுவலகத்துக்குச் சென்று அழைத்துக்கொண்டு, ஊத்துக்குளி அருகேயுள்ள அரசண்ண மலை அடிவாரம் அருகே போய், ‘எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது. பணம் இல்லாமல் திண்டாடி வருகிறேன். உன்னுடைய தாலிச் செயினை கழற்றிக் கொடு’ என கேட்டிருக்கிறார்.  அதைக் கேட்டு அதிர்ந்துபோன சிந்து, ‘தாலிச் செயினை கழற்றிக் கொடுன்னு சொல்ற... நீ எல்லாம் ஒரு ஆம்பளையா?’ எனக் கத்தியிருக்கிறார். ஒருகட்டத்தில் சிந்துவின் மூச்சை ஒரேடியாக நிறுத்த நினைத்த தனசேகர், சேலையால் சிந்துவின் கழுத்தை நெறித்துக் கொலைசெய்திருக்கிறார். பிறகு, அருகே கிடந்த கற்களை எடுத்து இறந்துகிடந்த சிந்துவின் மீது குவியலாக அடுக்க முயன்றிருக்கிறார். அது சரிவராததால், பிணத்தை அப்படியே விட்டுவிட்டு, சிந்துவினுடைய ஐந்தரை பவுன் தாலிக்கொடியை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியிருக்கிறார்.

அதன்பிறகு, தனசேகர் அவருடைய உறவினர் ஒருவரை அழைத்துச்சென்று, அந்த நகையை 60 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து பணம் வாங்கியிருக்கிறார். அந்தப் பணத்தில், 5 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்று கொலைசெய்த சிந்துவின் கணவர் ஆறுமுகத்திடம், ‘அக்காவை பஸ் பிடித்து வீட்டுக்கு அனுப்பிட்டேன். இந்தா 5 ஆயிரம் ரூபாய் பணம்’ என கொடுத்திருக்கிறார். பணத்தை வாங்கிய ஆறுமுகம், வேலையை முடிந்து வீட்டுக்குச் சென்றபோது, வீட்டில் அவருடைய மனைவி சிந்து இல்லை. மனைவியை பல இடங்களில் தேடி அலைந்தவருக்கு, ஒருகட்டத்தில் தனசேகர் மீது சந்தேகம் வந்திருக்கிறது. தனசேகரிடம் விசாரிக்கையில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியிருக்கிறார். இதனால், சந்தேகமடைந்த ஆறுமுகம், தன்னுடைய மனைவியை காணவில்லை என்றும் தனசேகர் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகார் கொடுத்திருக்கிறார்.

கொலை

போலீஸார் விசாரணையில்,‘நான்தான் சிந்துவை பணத்துக்காகக் கொலைசெய்தேன். எனக்கும் சிந்துவுக்கும் தவறான உறவு இருந்தது. அந்த உரிமையில் நான் கேட்டால், தாலிச்செயினை கழற்றித் தருவாள் என நினைத்தேன். ஆனால், அவள் கத்தி கூச்சல் போட்டதால், எனக்கு கோபம் தலைக்கேறி, கழுத்தை நெறித்துக் கதையை முடித்துவிட்டேன்’ என கேஷூவலாகக் கூறியிருக்கிறார். இதையடுத்து, தனசேகரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். பணத்துக்காக நன்கு தெரிந்த உறவினரையே கொலைசெய்த சம்பவம் சென்னிமலை பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!