வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (31/07/2018)

கடைசி தொடர்பு:11:30 (31/07/2018)

சர்வதேச தரத்துடன் பயிற்சி... நெல்லையில் அமைக்கப்படுகிறது நீச்சல்குளம்!

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு கிராமத்தில், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்துடன் கூடிய நீச்சல்குளம் அமைக்கப்பட உள்ளது. அதற்கு, அந்த இடத்தில் அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினார்கள்.

நீச்சல்குளம் அடிக்கல் நாட்டுவிழா

நெல்லையில், சர்வதேச தரத்துடன்கூடிய நீச்சல்குளம் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு ஜூன் 19-ம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான விளையாட்டு கிராமத்தில், இந்த நீச்சல்குளம் அமைக்க முடிவுசெய்யப்பட்டது. 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீச்சல் பந்தயக்குளம், பயிற்சி செய்யும் குளம், உடற்பயிற்சிக் கூடம், உடை மாற்றும் அறைகள், கழிவறைகள், அலுவலகம், பயிற்சியாளர் அறை ஆகியவற்றுடன்கூடிய சர்வ தேச தரத்துடன் இந்த நீச்சல் பயிற்சி குளம் அமைக்கப்பட இருக்கிறது. 

தமிழகத்தின் இளைஞர்கள், நீச்சல் வீரர்கள், வீராங்கனைகள் உலகத் தரத்துடன் இங்கு பயிற்சி பெறுவதற்கும், சர்வதேச அளவில் போட்டிகள் நடத்துவதற்கும் ஏற்ற வகையில் இதை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

பாளையங்கோட்டையிலிருந்து சீவலப்பேரி செல்லும் சாலையில், 12 ஏக்கர் பரப்பளவில் இந்த நீச்சல் குளத்தை அமைக்க உள்ளனர். இதில், 50 மீட்டர் நீளம் கொண்ட குளம் அமைக்கப்பட இருக்கிறது. சென்னை வேளச்சேரிக்கு அடுத்தபடியாக நெல்லையில் 50 மீட்டர் நீளத்தில் குளம் அமைய இருப்பதால், வருங்காலத்தில் சர்வதேசப் போட்டிகளை இந்த மையத்தில்  நடத்துவதற்கான வாய்ப்பு உருவாகும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.