வெளியிடப்பட்ட நேரம்: 11:53 (31/07/2018)

கடைசி தொடர்பு:12:08 (31/07/2018)

`இன்றிரவு அனைவருக்கும் ஃப்ரைட் ரைஸ்..!’ - தொண்டர்களின் பசியாற்றிய அன்பழகன் எம்.எல்.ஏ.

ஜெ.அன்பழகன்

காவேரி மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கும் தி.மு.க தொண்டர்கள் அனைவருக்கும் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ சார்பில் உணவு வழங்கப்பட்டுவருகிறது.

அன்பழகன்


கடந்த 27-ம் தேதி, தி.மு.க தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அன்றில் இருந்தே தி.மு.க தொண்டர்கள் காவேரி மருத்துவமனைக்கு வரத் தொடங்கிவிட்டனர். நேற்று முன் தினம் (29/07/2018) மாலை, கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல், தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில், மருத்துவமனை அருகே இருந்த கடைகளை அடித்து நொறுக்கத் தொடங்கிவிட்டனர்.  `தலைவர் உடல்நிலைகுறித்து உண்மைத் தகவலை வெளியிட வேண்டும்’ என்று தொண்டர்கள் கோஷமிட்டனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறியது. தொண்டர்கள் அமைதி காக்கும்படியும், தலைவர் நலமாக இருக்கிறார் என்றும் கனிமொழி தெரிவித்தார். காவேரி மருத்துவமனையும் கருணாநிதி உடல்நிலை சீராகிவிட்டதாக அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து, தொண்டர்கள் சற்று நிம்மதியடைந்தனர்.

காவேரி மருத்துவமனை
 

மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டு நான்கு நாள்கள் கடந்துவிட்டன. ஆனாலும் காவேரி மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கும் தொண்டர்களை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.  `இரவு பகலாக மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் தொண்டர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுக்கலாமே?’ என்று ட்விட்டரில் ஒருவர் ஜெ.அன்பழகனுக்கு வேண்டுகோள் வைத்தார்.  அதை ஏற்றுக்கொண்ட அன்பழகன்,  `மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கும் தொண்டர்கள் அனைவருக்கும் மூன்று வேளை சாப்பாடு வழங்கப்படும். கருணாநிதியைப் பார்க்க வருபவர்களுக்கு மனதளவிலே சோகம் இருக்கணும். உடலளவில் சோகம் இருக்கக் கூடாது. இன்று இரவு கழகத் தொண்டர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் ஃப்ரைட் ரைஸ் வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார் அன்பழகன். அதன்படி உணவும் வழங்கிவருகிறார்.  

காவேரி மருத்துவமனை

'கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது' என்று ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், முதல்வர் பழனிசாமி, மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் தெரிவித்துள்ள போதிலும்,  தொண்டர்கள் முகத்தில் ஒருவித குழப்பமும் தவிப்பும் நிலவுகிறது. பெண்களையும், முதியவர்களையும்  `வீட்டுக்குப் போங்க... தலைவர் குணமடைந்து வருகிறார். அவர் மீண்டு வருவார்’ என்று தி.மு.க நிர்வாகிகள் சமாதானப்படுத்திய பின்னரும், அவர்கள் அங்கிருந்து புறப்பட மறுத்துவருகின்றனர். இதனிடையே, அங்கிருப்பவர்களின் போன், பணம் உள்ளிட்டவற்றைத் திருடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும் மருத்துவமனை வாசலை விட்டு நகராமல் காத்திருக்கும் தொண்டர்களுக்கு,  `அன்பழகன் கொடுக்கும் உணவும் தண்ணீர் பாட்டிலும் அவர்களின் சோர்வை நீக்கும்’ என்று தி.மு.க-வினர் ட்விட்டரில் பாராட்டிவருகின்றனர். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க