உள்ளாட்சித் தேர்தல் வழக்கு! - அதிரடிகாட்டிய உயர் நீதிமன்றம் | The time table should be filed before august 6 chennai HC order in tamilnadu Local bodies election

வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (31/07/2018)

கடைசி தொடர்பு:12:17 (31/07/2018)

உள்ளாட்சித் தேர்தல் வழக்கு! - அதிரடிகாட்டிய உயர் நீதிமன்றம்

'உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடத்தப்படும்?' என்று மாநில தேர்தல் ஆணையத்திடம்  கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், 'ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அட்டவணையைத் தாக்கல்செய்ய வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித்தேர்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால், கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி, இதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டு, நவம்பர் 17, 2017-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனக் கடந்த வருடம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவின் படி, தேர்தல் அறிவிப்புகள் வெளியிடாத மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ் பாரதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. 

உயர் நீதிமன்றன் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர்ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, `கடந்த ஆண்டு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்ட பிறகு, இதுவரை என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நெடுஞ்செழியன், தொகுதி மறுவரைவு தொடர்பான பணிகள் நடைபெற்றுவருவதாகவும், தேர்தல் நடத்தும் பணிகள் தொடர்பாக திட்டமிடப்பட்டுவருவதாகவும் கூறினார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் தேர்தல் நடத்தத் திட்டமிடுவீர்கள். எத்தனை ஆண்டுகளுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் எனக் கேள்வி எழுப்பினர். கடந்த ஆண்டே இதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டும் இன்னும் ஏன் தேர்தல் நடத்தப்படவில்லை எனவும், எப்போது தேர்தல் அட்டவணையைத் தாக்கல்செய்வீர்கள் எனவும் கேட்டனர். அதற்கு, இன்னும் ஒரு வாரத்துக்குள் அட்டவணை தாக்கல்செய்யப்படும் என வழக்கறிஞர் நெடுஞ்செழியன் கூறினார். ஆனால், நீதிபதிகள் அதை ஏற்க மறுத்தனர். பிறகு, இந்த வழக்கை மதியத்துக்கு மேல் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதையும் நீதிபதிகள் ஏற்க மறுத்து, 'முன்னதாக மாநில தேர்தலை ஆணையம் சார்பில் இந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இப்போது ஏன் வரவில்லை, அவர் உடனடியாக ஆஜராகி இதற்கு விளக்கமளிக்க வேண்டும்' எனக் கூறினர். 

பின்னர், மூத்த வழக்கறிஞர் ஆஜராகாததிலிருந்து, இது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எனத் தெளிவாகத்தெரிகிறது. அடுத்து நடைபெற உள்ள வழக்கு விசாரணை முடிவடைவதற்குள், மாநில தேர்தல் ஆணையத்தின் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி இதற்கு விளக்கமளிக்க வேண்டும் அல்லது இது முற்றிலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்காகவே கருதப்படும் எனக் கூறினர். பின்ன,ர் வரும் ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அட்டவணையைத் தாக்கல்செய்ய வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும், இது குறித்து தமிழக அரசும் விளக்கமளிக்க வேண்டும் எனக் கூறி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.