பொன்.மாணிக்கவேல் வசம் வந்த இரட்டைத் திருமாளிகை வழக்கு! - அதிர்ச்சியில் அறநிலைத்துறை அதிகாரிகள்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலின் வடமேற்குப் பகுதியில், இரட்டைத் திருமாளிகை உள்ளது. இப்பகுதி சிதிலமடைந்த காரணத்தால், பக்தர்கள் பெரும்பாலும் அப்பகுதிக்குச் செல்வதில்லை. கல்வெட்டுகள், கலைநயம் மிக்க சிற்பங்கள் அடங்கிய தூண்கள் ஆகியவை இரட்டைத் திருமாளிகையில் காணப்படுகின்றன.

ஏகாம்பரநாதர் கோயில் காஞ்சிபுரம்

இரட்டைத் திருமாளிகை சிதிலமடையத் தொடங்கியதையடுத்து அதைச் சீரமைக்க, கடந்த 2014-ம் ஆண்டு, தமிழக அரசு 79.90 லட்சம் ரூபாயை ஒதுக்கியது. மேலும், மாளிகையின் கீழ்ப் பகுதியைச் சீரமைக்க 65 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. பாதி வேலைகூட நிறைவடையாத நிலையில், அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக நீதிமன்றத்தை நாடி, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீது காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

இரட்டைத் திருமாளிகை, ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்

டில்லிபாபுவின் மனுவை விசாரணைசெய்த காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம், இந்து அறநிலையத்துறை திருப்பணி கூடுதல் ஆணையர் கவிதா, முன்னாள் இணை ஆணையர் சிவாஜி, உதவி ஆணையர் ரமணி, செயல் அலுவலர் முருகேசன், கண்காணிப்புப் பொறியாளர் பாலசுப்பிரமணி, ஸ்தபதி நந்தகுமார் ஆகியோர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என சிவகாஞ்சி காவல்நிலையத்துக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து, அந்த  ஆறு பேர் மீதும் சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு, கடந்த 17-ம் தேதி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் டி.எஸ்.பி குமார், இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி ஆகியோர் நேற்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு வந்து ஆய்வுசெய்தனர். மேலும், புகார் அளித்த டில்லிபாபு மற்றும் ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் முருகேசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும், வழக்கு பதியப்பட்ட அதிகாரிகளிடமும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்த உள்ளார்கள். இதனால், இந்து அறநிலைத் துறை அதிகாரிகள் அச்சத்தில் இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!