வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (31/07/2018)

கடைசி தொடர்பு:20:12 (31/07/2018)

இரவில் காரில் கடத்தப்பட்ட இன்ஜினீயர்... அம்பத்தூர் சிக்னலில் நடந்த திகில்!

கடத்தல்

சென்னை அண்ணாநகரில், வீட்டுக்குத் திரும்பிய இன்ஜினீயர் காரில் கடத்தப்பட்டார். கடத்தல் கும்பலிடமிருந்து தப்பிய இன்ஜினீயர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். 

சென்னை கொளத்தூர், ராஜன் நகரைச் சேர்ந்தவர் பிரமோத். இன்ஜினீயரான இவர், சென்னை அண்ணாநகர் `டி' பிளாக்கில் சாஃப்ட்வேர் நிறுவனம் நடத்திவருகிறார். நேற்றிரவு 10 மணியளவில் நிறுவனத்தைப் பூட்டிவிட்டு வீட்டுக்கு காரில் புறப்பட்டார். அப்போது, அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், பிரமோத்தை தாக்கியது. பிறகு, அவரின்  கை, கால்களைக் கட்டி காருக்குள் தூக்கிப் போட்ட கும்பல், அதே காரில் அவரை கடத்திச் சென்றது. சத்தம் போடாமலிருக்க வாயை துணியால் கட்டியிருந்தனர். இதனால், பிரமோத்தால் எதுவும் செய்ய முடியவில்லை. அண்ணா நகரிலிருந்து புறப்பட்ட கார், மின்னல்வேகத்தில் அம்பத்தூர் நோக்கிச் சென்றது. 

அம்பத்தூர் தொழிற்பேட்டை சிக்னலில் கார் நின்றது. அப்போது, சிக்னலுக்காகக் காத்திருந்த மோட்டார் சைக்கிள்மீது கார் மோதியது. இதனால், பைக்கில் வந்தவருக்கும் காரில் இருந்தவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய பிரமோத், கால்களால் காரின் கண்ணாடியை உடைத்தார். அதைப் பார்த்த பொதுமக்கள் அங்கு ஓடிவந்தனர். இதைப் பார்த்ததும் காரிலிருந்து மூன்று பேர் தப்பி ஓடினர். ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டார். அதன்பிறகு, பிரமோத்தை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிரமோத், அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தி, பிரமோத்தை காரில் கடத்தியவர்களைத் தேடிவருகிறார். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `` இன்ஜினீயரான பிரமோத், சொந்தமாக சாஃப்ட்வேர் நிறுவனம் நடத்துவதால், அவரிடம் கோடிக்கணக்கில் ரூபாய் இருக்கும் என்று கடத்தல் கும்பல் கருதியுள்ளது. அண்ணா நகரிலிருந்து கார் புறப்பட்டதும், பிரமோத்திடம் பணம் கேட்டு அந்தக் கும்பல் மிரட்டியுள்ளது. அதோடு, அவரை தாக்கியும் உள்ளது. அம்பத்தூரில் விபத்து ஏற்பட்டவுடன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த பிரமோத், புத்திசாலித்தனமாக செயல்பட்டு தப்பித்துள்ளார். பிரமோத்தை கடத்தியவர்களில் ஒருவர் பற்றிய விவரம் கிடைத்துள்ளது. அவர்மூலம் மற்ற மூன்று பேரின் விவரங்களும் தெரியவந்துள்ளது" என்றனர்.  

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில் ``இன்ஜினீயர் பிரமோத்தை கடத்தி, பொதுமக்களிடம் சிக்கியவர்  ஓட்டேரியைச் சேர்ந்த ஜானகி ராமன் என்று தெரியவந்துள்ளது.  தப்பி ஓடியவர்கள் ஓட்டேரியைச் சேர்ந்த இம்ரான், பட்டாளத்தைச் சேர்ந்த பிரபாகரன், பிரான்சிஸ் என்ற விவரம் கிடைத்துள்ளது. ஜானகிராமனிடம் விசாரித்தபோது, பணத்துக்காகத்தான் பிரமோத்தைக் கடத்தியதாகத் தெரிவித்துள்ளார்." என்றார்.