வெளியிடப்பட்ட நேரம்: 13:06 (31/07/2018)

கடைசி தொடர்பு:16:03 (31/07/2018)

லஞ்சப் புகாரில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சிலை செய்ததில் மோசடியில் ஈடுபட்டதாக, அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, இன்று காலை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கவிதா

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் புதிதாகச் செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் சிலை செய்வதில் 5.75 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகத் தலைமை ஸ்தபதி முத்தையா உள்ளிட்ட 9 பேர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்திய தொழில்நுட்பக் கழக  நிபுணர்கள், சிலைகளின்  தன்மைகுறித்து ஆய்வுசெய்திருக்கின்றனர். மேலும், கடந்த முறை இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பி.எம்.ஐ என்ற அமெரிக்க நவீன எலெக்ட்ரானிக் இயந்திரத்தின் மூலமும் சோதனை செய்யப்பட்டது. அதில், தங்கத்தில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானது.

இந்நிலையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அர்ச்சகர் ஒருவர் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில், கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. மேலும், சோமஸ்கந்தர் சிலை செய்ததில் 50 லட்ச ரூபாய் லஞ்சமாக கவிதாவுக்குக் கொடுத்ததாகவும், அர்ச்சகர் தன்னுடைய வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அறநிலையத்துறை வரலாற்றில், உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருப்பது அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.