'தலைவர் கலைஞர்', 'பெரியவர் கலைஞர்!'   - எடப்பாடி பழனிசாமி இப்படிக் குறிப்பிட்டது ஏன்?  | Why i am using the word kalaignar? Explains Edappadi palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (31/07/2018)

கடைசி தொடர்பு:14:13 (31/07/2018)

'தலைவர் கலைஞர்', 'பெரியவர் கலைஞர்!'   - எடப்பாடி பழனிசாமி இப்படிக் குறிப்பிட்டது ஏன்? 

கருணாநிதியைக் கௌரவிப்பதற்கு நான் தயக்கம் காட்டவில்லை. இதனால், அ.தி.மு.க-வுக்கு எந்தவித பாதிப்பும் வராது.

'தலைவர் கலைஞர்', 'பெரியவர் கலைஞர்!'   - எடப்பாடி பழனிசாமி இப்படிக் குறிப்பிட்டது ஏன்? 

தி.மு.க தலைவர் கருணாநிதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கச் சென்றது, அரசியல்ரீதியாக கவனத்தைப் பெற்றுள்ளது. ' 'தலைவர்', 'பெரியவர்' என கருணாநிதியை அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது, தி.மு.க-வுக்கு மரியாதைகொடுப்பதில் தவறு இல்லை' என அமைச்சர்களிடம் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் கருணாநிதி. கடந்த 29-ம் தேதி மாலை, அவரது உடல்நிலையில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவுவதாக வெளியான தகவலால், மருத்துவமனை முன்பு குவிந்தனர் தொண்டர்கள். மருத்துவமனைக்குள் என்ன நடக்கிறது என்ற விவரத்தை அறிய முடியாமல், ' மீண்டு வா தலைவா...உன் குரலுக்காகக் காத்திருக்கிறோம்' என உணர்ச்சிவசப்பட்டு குமுறினர். அன்று இரவு 10 மணியளவில், மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியான பிறகே, இயல்பு நிலை திரும்பியது. 'படிப்படியாகக் குறைந்த பல்ஸ் ரேட்டால் மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர் கருணாநிதி குடும்பத்தினர். அடுத்த சில நிமிடங்களில், மருத்துவ சிகிச்சையின் பயனாக மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டார் கருணாநிதி. அவர் மீண்டு வந்தது உண்மையிலேயே அதிசயம்தான்' என நெகிழ்ந்தனர் மருத்துவர்கள்.

கருணாநிதியின் உடல்நிலைகுறித்து மாறுபாடான தகவல்கள் வெளியானதால், 'அரசு நிகழ்ச்சிகளை ரத்துசெய்துவிட்டு சென்னை திரும்புகிறார் எடப்பாடி பழனிசாமி. இன்று நள்ளிரவு 1 மணியளவில் மருத்துவமனைக்குச் செல்கிறார்' என்றெல்லாம் செய்தி பரவியது.  அதற்கு, முதல்வர் அலுவலகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மறுநாள் காலையில், காவேரி மருத்துவமனையில் கருணாநிதியைச் சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி.  அதன்பிறகு, ஸ்டாலினிடமும் கனிமொழியிடமும் அவரது உடல்நிலைகுறித்து கேட்டறிந்தார். இந்தப் புகைப்படங்கள் வெளியானதும், 'வட இந்தியாவில் நிலவக்கூடிய அரசியல் நாகரிகம், தமிழகத்திலும் துளிர்விட்டுள்ளது' என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. 

கனிமொழி, எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

கருணாநிதியைச் சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ' முன்னாள் முதல்வர், தலைவர் கலைஞரின் உடல்நிலை சீராக உள்ளது. துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோருடன் பெரியவர் கருணாநிதியை நேரடியாகச் சென்று பார்த்தேன். அவர் நலமுடன் இருக்கிறார். மருத்துவக்குழு அவரை கவனித்துவருகிறது’ என்றார். ' தலைவர் கலைஞர்', 'பெரியவர் கலைஞர்' என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டதை ஆச்சர்யத்தோடு கவனித்தனர் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள். இதுகுறித்து அமைச்சர்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி, 'பழைய அரசியல் முடிந்துவிட்டது. கருணாநிதியோடு அம்மாவுக்கு (ஜெயலலிதா) இருந்த போட்டி 2016 சட்டமன்றத் தேர்தலோடு முடிந்துவிட்டது. கருணாநிதியைக் கலைஞர் என்பதாலோ பெரியவர் என்பதாலோ என்ன விளைவு வந்துவிடப் போகிறது? 

தற்போது அவர், நமக்கு அரசியல் எதிரி அல்ல. ஸ்டாலினுக்கு எதிராக மட்டும்தான் நமது அரசியல் இருக்க வேண்டும். எனவே, கருணாநிதியைக் கௌரவிப்பதற்கு நான் தயக்கம் காட்டவில்லை. இதனால், அ.தி.மு.க-வுக்கு எந்தவித பாதிப்பும் வராது. அன்றைக்கு எம்.ஜி.ஆர் இறந்தபோது, திட்டமிட்டு கருணாநிதியின் சிலையை உடைத்தார்கள். அன்று இருந்த அரசியல் காலகட்டம் வேறு. இப்போதுள்ள காலகட்டம் என்பது வேறு. தி.மு.க-வில் உள்ள தலைவர் பதவியை கருணாநிதிக்கு கௌரவமாகத்தான் கொடுத்திருக்கிறார்கள். உண்மையில், ஸ்டாலின்தான் தலைவராக இயங்கிக்கொண்டிருக்கிறார். அரசியல் போட்டியில் ஸ்டாலின்தான் இருக்கிறார்; கருணாநிதி அல்ல. நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்கும்போதே அரசியலில் இருந்து கருணாநிதி ஓய்வுபெற்றுவிட்டார். அவரைப் புகழ்வதால் எந்தப் பிரச்னையும் இல்லை. தி.மு.க-வுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதிலும் எந்தத் தவறும் இல்லை' எனக் கூறியிருக்கிறார்.