வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (31/07/2018)

கடைசி தொடர்பு:15:20 (31/07/2018)

`என் அரசியல் எதிரிகள் செய்த சதி'- டி.டி.வி.தினகரன் காட்டம்

``பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்துக்குப் பின்னணியில் அரசியல் எதிரிகள் யாராவது சதி செய்திருக்கலாம்'' என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இல்லம் முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 29) அக்கட்சி நிர்வாகி புல்லட் பரிமளம் என்பவர் தனது காரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றார். இதைத் தடுக்கச் சென்ற தினகரனின் ஓட்டுநருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு டி.டி.வி.தினகரன் இன்று வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``என் வீட்டு வாசலில் வந்து உருவ பொம்மையை எரிக்க முடியுமா? என் கட்சியினர், ஊழியர்கள் என ஏராளமானோர் இருப்பர். பரிமளம் தனது காரில் வைக்கோலுக்கு கீழே ஏதோ மர்மப் பொருளை எடுத்து வந்துள்ளார். வாகனத்தில் தீயை பற்ற வைத்தபோது அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது. பரிமளம் தனது கார் கதவை திறக்கச் சொல்லி ஓட்டுநரிடம் தெரிவித்தார். அவர் கதவை திறந்ததும் தீ வைத்தார். உடனே பயங்கர சத்தத்துடன் தீப்பற்றி எரிந்தது. காருக்குள் பெட்ரோல் வெடிகுண்டு இருந்ததா அல்லது வேறு பொருள்கள் இருந்ததா என்பது தெரியவில்லை.

சிசிடிவி கேமரா காட்சியில் சத்தம் வராததால் அதுகுறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சத்தம் கேட்டு பக்கத்து தெருவில் இருந்தவர்கள் எல்லாம் கூடிவிட்டனர். காவல்துறை அதிகாரிகளிடமும் நான் இதைத்தான் தெரிவித்தேன். அந்த மர்மப் பொருள் குறித்து ஆய்வில் தெரியவரும் என்றனர். எனக்கு தனிப்பட்ட முறையில் எதிரிகள் என்று யாரும் இல்லை. அரசியல் எதிரிகள் யாராவது இவ்வாறு சதி செய்திருக்கலாம். பரிமளம் அடாவடியாக செயல்படுவதாக மாவட்டப் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உயர்மட்டக்குழு கூடி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது'' என்றார்.