வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (31/07/2018)

கடைசி தொடர்பு:17:00 (31/07/2018)

இந்து மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர் நடத்திய நாடகம் அம்பலம்!

போலீஸ் பாதுகாப்பை நிரந்தரமாக வைக்க தனது வீட்டின்மீதும் இருசக்கர வாகனத்தையும் இந்து மக்கள் கட்சியின் தென்மண்டலச் செயலாளர் பாலமுருகன் எரித்ததை காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

இந்து மக்கள் கட்சி பாலமுருகன்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ளது புலியூர் கிராமம். இந்தக் கிராமத்தில் பாம்பாட்டி சித்தர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பில்லி சூனியம் பார்ப்பது, பேய் விரட்டுவது போன்ற தொழில்களைச் செய்து பெரும் அளவில் பணம் சேர்த்துவிட்டனர் கோயில் பூசாரி பாலமுருகன் குடும்பத்தினர். ஒருமுறை இந்தக் கோயிலுக்கு இந்துமக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் வந்தபோது கோயில் பூசாரிகளில் ஒருவரான பாலமுருகன் நெருக்கமாகி விட்டார். அதன் பிறகு சிவகங்கை மாவட்ட இந்துமக்கள் கட்சியின் மாவட்டத் தலைவராக பாலமுருகனுக்கு பொறுப்பு கொடுத்தார் அர்ஜூன் சம்பத். மேலும், சிலமாதங்களில் இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் ரேஞ்சுக்கு உயர்ந்தார் பாலமுருகன். இதற்கிடையில் தனக்கு இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து கொலை மிரட்டல் வருவதாகச் சொல்லி திருப்புவனம் மதுரை தெப்பக்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் இவருக்குப் பாதுகாப்புக்காக போலீஸார் நியமிக்கப்பட்டிருந்தனர்.

தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு நிரந்தரமாக வேண்டும் என்பதற்காக தன் டிரைவர் மூலமாக தென்காசியில் டூவீலர் ஒன்றை திருடி வரச் செய்து அதன் இன்ஜினின் சேஸ் நம்பரை அழித்துவிட்டு அந்த பைக் மற்றும் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை தன்னுடைய நண்பர்கள் மூலமாக வீச வைத்துள்ளார் பாலமுருகன். இதை தனிப்படை டி,எஸ்,பி திருமலைக்குமார் விசாரணையில் கண்டுபிடித்தார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்த பாலமுருகனின் நண்பர்கள் பனையூர் பிரசாந்த், சிந்தாமணி கார்த்திக், மதுரை கீரைத்துறை விஜய், கார்த்திக், முருகன் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள பாலமுருகன், அவரின் தம்பி ஆனந்தவேல் ஆகியோரை போலீஸார் தேடிவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க