வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (31/07/2018)

கடைசி தொடர்பு:16:40 (31/07/2018)

சென்னையில் காதல் ஜோடிக்கு நேர்ந்த அதிர்ச்சி!

காதல் ஜோடியிடம் செயின் பறிப்பு

சென்னை ஈஞ்சம்பாக்கம், சாய்பாபா கோயில் அருகே தனிமையில் சந்தித்த காதல்ஜோடியை பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் மிரட்டி செயினைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஈஞ்சம்பாக்கம், சாய்பாபா கோயில் அருகில் உள்ள கடற்கரையில் காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு பைக்கில் வந்த இரண்டு பேர், காதல் ஜோடியைக் கத்தி முனையில் மிரட்டினர். அவர்களிடமிருந்து செயின், செல்போன் ஆகியவற்றைப் பறித்துச் சென்றனர். இந்தத் தகவல் நீலாங்கரை போலீஸாருக்கு கிடைத்ததும் அவர்களைப் பிடிக்க வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நீலாங்கரை பகுதியில் பைக்கில் சென்ற இரண்டு பேரிடம் போலீஸார் விசாரித்தனர். அவர்கள் சரியான தகவல்களைச் சொல்லவில்லை. இதனால் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவர்தான் காதல் ஜோடியை மிரட்டியவர்கள் என்று தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தபோது, வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த சிவா, ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த விக்கி என்று தெரிந்தது. அவர்கள் இருவரிடமுமிருந்து  நகை, கத்தி, செல்போன், பைக் ஆகியவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கடற்கரையில் பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியை இரண்டு பேர் மிரட்டி நகை, செல்போனைப் பறித்துள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்ட காதல் ஜோடி சில காரணங்களுக்காகப் புகார் கொடுக்கவில்லை. ஆனால், நடந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் எங்களுக்குத் தகவலாகக் கொடுத்தனர். அதன்பேரில்தான் விசாரணை நடத்தினோம். வாகனச் சோதனையில் சிவா, விக்கி என இரண்டு பேர் சிக்கினர். இவர்கள் இருவர்தான் காதல் ஜோடியை மிரட்டி நகையைப் பறித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இருவரும் சேர்ந்து செயின் பறிப்பு, வழிப்பறி போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். சிவாவும் விக்கியும் ஒன்றாக வெட்டுவாங்கேணி பகுதியில் படித்துள்ளனர். நண்பர்களான இருவரும் சேர்ந்தே குற்றச் செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். கானத்தூர் போலீஸ் நிலையத்தில் சிவா மீது வழக்குகள் உள்ளன. இதனால், அவரை கானத்தூர் போலீஸார் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளனர். சிறையிலிருந்து வெளியில் வந்த சிவா, தன்னுடைய நண்பர் விக்கியுடன் சேர்ந்து மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் மீது 6 வழக்குகள் உள்ளன" என்றனர்.