வெளியிடப்பட்ட நேரம்: 16:21 (31/07/2018)

கடைசி தொடர்பு:19:05 (31/07/2018)

பணி ஓய்வு பெறுகிறார் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை!

கோவை மாவட்டத்தில் உள்ள கோவாடி கிராமத்தில் 22.07.1958-ல் பிறந்த மயில்சாமி அண்ணாதுரை, தமிழ் வழியில் பள்ளிக் கல்வியை முடித்தவர். 1980-ல் கோவை அரசுப் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து 1982-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள இஸ்ரோவில் (இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்) அறிவியல் ஆய்வாளராகப் பணியாற்ற அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவருடைய கடுமையான உழைப்பும் கண்டுபிடிப்புகளும் அவரின் தனித்தன்மையை அடையாளம் காட்டின. இஸ்ரோவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய மயில்சாமி, 2005-ம் ஆண்டு இஸ்ரோவின் இயக்குநராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். 

மயில்சாமி அண்ணாதுரை

ஆரம்பக் காலங்களில் ஐ.ஆர்.எஸ்.1ஏ, இன்சாட்-2ஏ, இன்சாட்-2பி திட்டங்களில் மேலாளராகவும் 1994-ல் இன்சாட்- 2சி செயற்கைக் கோள் திட்டத்தின் துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். நிலவுக்கு அனுப்பிய சந்திராயன்-1 மற்றும் செவ்வாய்க்கிரகத்துக்கு அனுப்பிய மங்கல்யான் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த செயற்கைக் கோள்களின் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர். சந்திராயன்-2 திட்டத்திலும் திட்ட இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். சந்திராயன்-2 செயற்கைக் கோள் வரும் அக்டோபர் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் 75-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார். `வளரும் அறிவியல்’ என்ற அறிவியல் மாத இதழில் கௌரவ ஆசிரியராக உள்ளார். கட்டுரையாளர், கவிஞர், சிறந்த பேச்சாளர் எனப் பன்முகத்தன்மை அடையாளம் கொண்டவர். அழகு தமிழில் அறிவியலை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களைச் சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கடந்த 36 ஆண்டுகளாகப் பெங்களூரு இஸ்ரோவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ள மயில்சாமி அண்ணாதுரை இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க