வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (31/07/2018)

கடைசி தொடர்பு:16:31 (31/07/2018)

`எழுந்து வா தலைவா... அரசியல் செய்வோம்' - கருணாநிதி நலம்பெற உருகும் தொண்டர்கள்

தி.மு.க தலைவர் கருணாநிதி பூரண குணமடைய அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்துவரும் வேளையில், தி.மு.க எதிர்ப்பாளர்களும், கருணாநிதி உடல் நலம் பெற தங்கள் குரல்களை உயர்த்தி வருகின்றனர்.

கருணாநிதி

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலிவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள பல்வேறு கட்சித்தலைவர்கள் காவேரி மருத்துவமனையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இரவும், பகலுமாக காவிரி வாசலில் தவம் கிடக்கின்றனர் தி.மு.க தொண்டர்கள். உடல்நலம் சீராக உள்ளது என்ற அறிவிப்பால் அவர்கள் நிம்மதியடைந்துள்ளனர். கருணாநிதியின் உடல் நலம் குறித்து, தி.மு.க ஆதரவாளர்கள் மட்டுமின்றி, எதிர்ப்பாளர்களும், அவர் விரைவில்உடல்நலன் பெற்று வீடு திரும்பவேண்டுமென்று கருத்து தெரிவித்து வருகின்றனர். வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் கருணாநிதி குணம் பெற வேண்டி பல்வேறு பதிவுகளை தி.மு.க எதிர்ப்பாளர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

தொண்டர்கள்

`தலைவா உன்னை வெறுக்கவில்லை எதிர்த்தோம்; எழுந்து வா அரசியல் செய்வோம்”. ``நீங்கள் ஆளவேண்டாம் என்று நினைத்தோமே  தவிர வாழவேண்டாம் என்று நினைக்கவில்லை’. `ஜென்மப் பகையே ஆனாலும் அதிலும் மனிதம் கொண்ட மாமனிதர் மீண்டும் வாங்கய்யா”. ``கலைஞர் அவர்களே உங்களை எளிதாகவிட மாட்டோம். என் தலைமுறைக்கு நீதான் எதிரி. எழுந்து வா அரசியல் செய்வோம்”.  ``தலைவா உன்னை நான் வணங்கவில்லை, உன்னை போற்றவில்லை இருப்பினும் என் மனம் ஏங்குகிறது உன்னை தொலைத்து விடுவேனோ என்று'' இவ்வாறு பலர் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

போஸ்டர்

இதனிடையே சென்னை போயஸ்கார்டனில் தி.மு.க தலைவரை வாழ்த்தி, அக்கட்சியினர் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.