வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (31/07/2018)

கடைசி தொடர்பு:18:15 (31/07/2018)

சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தைக் கைவிடும் எண்ணமில்லை! - மத்திய அரசு திட்டவட்டம்

சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தைக் கைவிடும் எண்ணமில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. 

சேலம்


சேலம் - சென்னை இடையில் புதிய எட்டு வழிச் சாலை அமைக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் வழியாக சுமார் 277 கி.மீட்டர் தொலைவில் இந்தச் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். அரசியல் கட்சிகளும் தங்களது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக `என் நிலம், என் உரிமை’ என்ற பெயரில் திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரையில் நடைப்பயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாளை தொடங்க இருக்கிறது. 

இந்த நிலையில், சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருப்பது குறித்து மத்திய அரசுக்குத் தெரியுமா. எதிர்ப்புகள் வலுவடைந்தால் அந்த திட்டத்தைக் கைவிடுவது குறித்து மறுபரிசீலனை செய்யும் எண்ணம் மத்திய அரசுக்கு இருக்கிறதா என நாடாளுமன்ற மாநிலங்களவையில் அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பினார். மேலும், இந்த திட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்தும், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து அவர்களில் ஒரு சிலர் தற்கொலை செய்துகொண்டது குறித்தும் அரசு அறிந்திருக்கிறதா என்றும் சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் மனுஷ்க் எல்.மாண்ட்வியா எழுத்துபூர்வமாக பதிலளித்திருக்கிறார். அந்த பதிலில், ``சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தால் விவசாயிகள் மற்றும் வனத்தின் பரப்பளவு குறையும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. மேலும், விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக நிலம் கையகப்படுத்தும் பணிக்குச் சென்ற அதிகாரிகள் எந்தவிதமான தகவலும் அளிக்கவில்லை. இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் எண்ணமில்லை. இதனால் சேலம் - சென்னை இடையேயான தூரம் 68 கி.மீ தூரம் குறையும் என்பது உள்ளிட்ட சாதகமான அம்சங்கள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்தத் திட்டம் அப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.