வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (31/07/2018)

கடைசி தொடர்பு:18:40 (31/07/2018)

விபத்தில் சிதைந்த கால்கள்... கண்டுகொள்ளாத மருத்துவமனை ஊழியர்... முதலுதவி அளிக்காததால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

விபத்தில் உயிரிழந்த சரஸ்வதி

திருப்பூரில் தனியார் மருத்துவமனை அருகே விபத்தில் படுகாயமடைந்த பெண்ணுக்கு, அந்த மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சையளிக்க முன்வராததால், காலதாமதம் ஏற்பட்டு அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கரைப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரின் மனைவி சரஸ்வதி. தம்பதி இருவரும் ஆடித் திருநாளுக்கு துணி எடுப்பதற்காக நேற்றைய தினம் தங்களது இரு சக்கர வாகனத்தில் கடைவீதிக்குச் சென்றனர். அங்கு துணி எடுத்துவிட்டு வீடு திரும்பும் வழியில், அரசுப் பேருந்து ஒன்று இவர்களது வாகனத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சரஸ்வதியின் கால்கள் முற்றிலுமாக சிதைந்து, அவருக்கு அதிகளவு ரத்தமும் கொட்டியது. 

இதைக்கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள், விபத்து நடந்த இடத்துக்கு மிக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த மருத்துவமனையின் ஊழியரும் சம்பவ இடத்துக்கு வந்து அடிபட்ட சரஸ்வதியை பார்வையிட்டுச் சென்றார். இருப்பினும் 20 நிமிடங்கள் கடந்தும்கூட சரஸ்வதியை தங்களது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அந்த மருத்துவமனை ஊழியர்கள் எந்தவித மும்முரமும் காட்டவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியில் இருந்தவர்கள், அந்த மருத்துவமனைக்கே நேரில் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகே, அந்தத் தனியார் மருத்துவமனையிலிருந்து சரஸ்வதியை அழைத்துவர ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது. 

இருப்பினும் அதற்குள்ளாகவே அரசின் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அப்பகுதிக்கு வந்து, சரஸ்வதிக்கு முதலுதவி அளித்து, அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சரஸ்வதியை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை உடனடியாக மேல் சிகிச்சைக்கு கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனைத்தொடர்ந்து, கோவையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சரஸ்வதி, இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ``விபத்து நடந்தபோது, அருகில் இருந்த தனியார் மருத்துவமனை ஊழியர்கள், சரஸ்வதிக்கு முதலுதவி சிகிச்சையாவது வழங்கியிருக்க வேண்டும். அதைவிட்டு, துளியும் மனிதாபிமானமற்ற வகையில் அவர்கள் அலட்சியமாக இருந்ததால்தான் சரஸ்வதியின் உயிர் பறிபோயிருக்கிறது’’ என்று குற்றம்சாட்டுகிறார்கள் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள்.