உடல்நிலை தேறிவரும் கருணாநிதி! - ராகுல் காந்தி நேரில் சந்தித்த புகைப்படம் வெளியீடு

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனைக்குச் சென்று நேரில் விசாரித்தார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. அந்தப் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ராகுல்

உடல் நலிவு காரணமாகத் தி.மு.க தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதற்காகப் பல்வேறு கட்சித் தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்குச் சென்று  தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் சென்னை வந்த துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதேபோல அண்டை மாநில முதல்வர்களும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர். நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தனர். இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்திலிருந்து காவேரி மருத்துவமனைக்குச் சென்ற ராகுல்காந்தி, தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதன்பிறகு, ஐ.சி.யூ வார்டில் சிகிச்சைப் பெற்றுவரும் கருணாநிதியை அருகில் சென்று ராகுல் காந்தி பார்த்தார். அப்போது, ராகுல் காந்தி வந்திருப்பதை கருணாநிதியின் காதுக்கருகில் மு.க.ஸ்டாலின் சென்று சொல்லுகிறார்.

ராகுல்

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், `கருணாநிதியை சந்திப்பதற்காக டெல்லியிலிருந்து வந்தேன். தி.மு.க-வுடன் நீண்ட காலமாகக் காங்கிரஸ் கட்சி நல்லுறவு வைத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மக்களுடன் நெருங்கிய உறவு கொண்டவர் அவர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதியைப் பார்த்தேன். அவரின் உடல்நிலை சீராக உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக மக்கள் போன்று அவரும் உறுதியானவர். சோனியா காந்தி சார்பில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ இவ்வாறு அவர் தெரிவித்தார். அவருடன் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!