வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (31/07/2018)

கடைசி தொடர்பு:19:45 (31/07/2018)

ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் கல்லூரி மாணவர் படுகாயம்!

நெல்லையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் விமான நிலையத்துக்கு திரும்பிய ஆளுநரின் பாதுகாப்புக்காகச் சென்ற பாதுகாப்பு  வாகனம் மோதியதில் கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்தார்.

ஆளுநரின்  பாதுகாப்பு வாகனம்

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடந்த 26-வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் பெற்ற 48,836 பேருக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து தூத்துக்குடி வரை விமானத்தில் வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் பல்கலைக்கழகத்துக்கு வந்தார்.

பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர், மீண்டும் விமான நிலையத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரது வாகனத்துக்கு முன்னும் பின்னும் காவல்துறையினரின் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. பாளையங்கோட்டை முருகன்குறிச்சி என்ற இடத்தில் சாலையில் இருந்த தடுப்புக் கம்பிகளை அகற்றி போலீஸார், ஒருவழிச் சாலை வழியாக ஆளுநரின் வாகனம் செல்ல வழி ஏற்படுத்தி இருந்தனர். ஆளுநரின் பாதுகாப்புக்காக நெல்லையின் புறநகர் பகுதியில் இருந்து பல்கலைக்கழகம் வரையிலும் 10 அடி தூரத்துக்கு ஒரு காவலர் வீதம் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஆளுநரின் வாகனம் முருகன்குறிச்சி பகுதியில் சென்றபோது சித்த மருத்துவக் கல்லூரி அருகில் இருந்து பைக்கில் சென்ற அபிஷேக் என்ற கல்லூரி மாணவரின் பைக், நிலை தடுமாறியது. அப்போது ஆளுநரின் வாகனம் கடந்துவிட்ட நிலையில், அவரது வாகனத்துடன் பாதுகாப்புக்காகச் சென்ற காவல்துறை வாகனம், பைக் மீது நேரடியாக மோதியது. அதில், மாணவர் அபிஷேக்குக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரது இரு சக்கர வாகனம் உடைந்து நொறுங்கியது. 

ஆனாலும், அபிஷேக் பைக் மீது மோதிய வாகனத்தை நிறுத்தாமல் காவல்துறையினர் சென்று விட்டனர். உடனடியாக சாலையில் பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் அவருக்கு உதவியதுடன், 108 ஆம்புலன்ஸுக்கும் தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மோதிய விபத்தில் மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.