திட்டமிட்டபடி நடைப்பயணம்..! - போலீஸ் அனுமதி மறுப்பால் கொந்தளிக்கும் கே.பாலகிருஷ்ணன்

காவல்துறையின் தடையை மீறி எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராக நாளை நடைப்பயணம் நடைபெறும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. 

கே.பாலகிருஷ்ணன்

சேலம் முதல் சென்னை வரை அறிவிக்கப்பட்டுள்ள எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவண்ணாமலையிலிருந்து சேலம் வரை நடைப்பயணம் மேற்கொள்ளப்படும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த நடைப்பயணத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இந்தநிலையில், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், 'சமீப காலமந்த் தமிழக காவல்துறை, மக்கள் பிரச்னைகள் தொடர்பாக நடத்தப்படும் எந்தவிதமான போராட்டத்துக்கும் இயக்கங்களுக்கும் அனுமதியளிப்பது இல்லை. அதிலும் குறிப்பாக, இயக்கங்களுக்கு அனுமதி கோருவோர் நீதிமன்றங்களை நாடி நிவாரணம் பெறுவதைத் தடுக்கும் பொருட்டு இயக்கம் நடத்துவதற்கு முந்தைய நாளில் ‘அனுமதி மறுக்கப்பட்டது’ என்ற கடிதம் தருவதைக் காவல்துறை தனது வழக்கமாகக் கொண்டுள்ளது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக யாரும் போராட முடியாது என்கிற நிலையில் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி தடுப்பதும் ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று தான் அனுமதி பெற வேண்டியதிருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 

இந்த நிலையில் விவசாயிகளை நிர்பந்தித்தும் துன்புறுத்தியும் பயமுறுத்தியும் எட்டு வழிச் சுங்கச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதைக் கைவிடக் கோரி திருவண்ணாமலையிலிருந்து - சேலம் வரை ஆகஸ்ட் 1 முதல் நடைப்பயணம் செல்ல அனுமதி கேட்டு, ஜூலை 23-ம் தேதியே காவல்துறை கூடுதல் இயக்குநருக்கும் திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி  மாவட்டக் கண்காணிப்பாளர்களுக்கும் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், காவல்துறை ஜூலை 29-ம் தேதியன்று சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி அனுமதி மறுத்து கடிதம் வழங்கியுள்ளது.

அரசு மக்களை நிர்பந்திக்கிறது, மக்களுக்கு ஆதரவாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடைப்பயணம் செல்கிறது. இதில் சட்டம் - ஒழுங்கு கெடுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. மேலும், காவல்துறை சட்டத்துக்கும் விதிக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு நடைப்பயணம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்த பின்னரும், இவ்வாறு அனுமதி மறுப்பது காவல்துறையின் எதேச்சதிகார போக்கை காட்டுவதாகும். அரசியல் சட்டத்தில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளைத் தட்டிப்பறிக்கும் இப்போக்கை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆனால், அதே சமயம் ஆளுங்கட்சியின் அனைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும் அனுமதிக்கப்படாத இடங்களிலும் வழித்தடங்களிலும் கூட கூட்டங்கள், சைக்கிள் பயணங்கள் அனுமதியளிப்பதை காவல்துறை வழக்கமாகக் கொண்டுள்ளது. ஆளுங்கட்சிக்கு ஒரு நீதியும் எதிர்க்கட்சிகளுக்கு மற்றும் அமைப்புகளுக்கு ஒரு நீதியையும் காவல்துறைக் கடைப்பிடிப்பது பாரபட்சமான போக்காகும். 

காவல்துறையின் இத்தகைய அணுகுமுறை ஏற்கத்தக்கதல்ல என்பதாலும் விவசாயிகளின் கோரிக்கை நியாயம் என்பதாலும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டபடி ஆகஸ்ட் 1-ம் தேதி இந்த நடைப்பயணத்தைத் தொடருவது என்று முடிவு செய்திருக்கிறது. காவல்துறையும் தமிழக அரசும் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக இயக்கங்களுக்கு அனுமதி மறுக்கிற கொள்கைகளைக் கைவிட வேண்டுமெனவும் இந்த நடைப்பயணத்தை அனுமதிக்க வேண்டுமெனவும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு மீண்டும் வலியுறுத்துகிறது.

மக்கள் உரிமைகளுக்காக அடக்குமுறைகளைக் கடந்து நடைபெறும் இப்பேரியக்கத்துக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!