`மல்லையா அடைக்கப்படும் சிறையைக் காட்டுங்கள்..!’ - இந்திய அரசிடம் வீடியோ கேட்கும் லண்டன் நீதிபதி

வங்கி மோசடி வழக்கில் இன்று லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரான விஜய் மல்லையாவுக்கு செப்டம்பர் 12 வரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

vijay mallya

கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடன் நெருக்கடியிலிருந்தபோது, அதை மீட்டெடுக்க ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 13 பொதுத்துறை வங்கிகளிலிருந்து 9,000 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றார் விஜய் மல்லையா. அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. இதுதொடர்பான வழக்கு கடந்த 2015-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அவர் லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். விஜய் மல்லையா மீது சி.பி.ஐ-யும் அமலாக்கத்துறையும் வழக்குகளைப் பதிவு செய்தன. லண்டனில் இருக்கும் மல்லையாவை நாடு கடத்தும்படி பிரிட்டனுக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. மேலும், இந்தியாவைச் சேர்ந்த 13 வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் மல்லையாவின் சொத்துகளை முடக்க உலகளாவிய உத்தரவைப் பிறப்பித்தன. அதை இங்கிலாந்தில் பதிவு செய்தன. 

இந்திய வங்கிகளின் உத்தரவை எதிர்த்து மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் முறையிட்டார்.  அந்த வழக்கில் பிரிட்டன் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மல்லையா சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம்  உத்தரவிட்டது. மல்லையாவின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. 

விஜய் மல்லையா

இதனிடையே மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு விசாரணை லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. `பிரிட்டன் குடியுரிமை பெற்றவரான மல்லையா இந்தியச் சிறையில் அடைக்கப்படலாம். இந்தியச் சிறைகளில் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது’ என்று மல்லையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முறையிட்டு வருகிறார்.  இந்தியாவில் மல்லையா அடைக்கப்பட உள்ள சிறையின் புகைப்படத்தை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் இந்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.  இன்றைய வழக்கு விசாரணையின் போது, மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் மல்லையா அடைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறி அந்தச் சிறையின் புகைப்படங்களை இந்திய அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. 

சிறைச்சாலை புகைப்படங்களைப் பார்த்த நீதிபதி,  `புகைப்படங்கள் தெளிவாக இல்லை. சிறையின் உட்புறத்தைத் தெளிவாக காட்டும் வீடியோவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். மேலும், மல்லையாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை, செப்டம்பர் 12-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். அதே தேதியில் வழக்கின் விசாரணை நடக்கும் என்றும் மல்லையா ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். 

வழக்கு விசாரணைக்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லையா  ``நான் பண மோசடி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது. நீதிமன்றம் சரியான தீர்ப்பைக் கொடுக்கும் என நம்புகிறேன். நான் செலுத்த வேண்டிய வங்கிக் கடனை செலுத்தத் தயாராக இருக்கிறேன். என் சார்பில் கருணை மனு சமர்ப்பிக்கப்பட்டதாக வெளிவரும் தகவல் பொய்யானது. என் மொத்த சொத்துகளை முடக்க யாருக்கும் உரிமையில்லை. அதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்'' என்று பேசினார். 

 `வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவேன்’ என்று மல்லையா நம்பிக்கையாகப் பேசி வருகிறார். ஆனால், இந்திய அரசு அவரைச் சிறையில் அடைப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!