`அந்த வலி எனக்குத் தெரியும்!' - சிறுமியின் பாலியல் வன்கொடுமை குறித்து உருகிய நடிகரின் மனைவி!

அயனாவரம் சிறுமி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குறித்து, நீதி வேண்டி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து நீதி வழங்கக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகர் கணேஷ் வெங்கட்ராம், நடிகை சாக்ஷி அகர்வால், டாக்டர் கமலா செல்வராஜ், திருநங்கை அப்சரா ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குழந்தையின் அக்கா ப்ரியா பேசும்போது, `குடியிருப்பில் அவ்வப்போது, குழந்தையின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. ஆனால், அதை யாருமே கண்டுகொள்ளவில்லை. இது என்ன மனிதத் தன்மை? குழந்தையிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வன்கொடுமை செய்துள்ளனர்' என்றார்.

போராட்டம்

இதையடுத்து நடிகை சாக்ஷி அகர்வால் பேசுகையில், ``குற்றவாளிகளுக்கு வெளிநாட்டில் வழங்கப்படுவதுபோல கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இந்தச் சம்பவம் ஏதோ விபத்தல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடுமை.  சமூகம் மட்டும் இதற்கு காரணமல்ல. குடும்பமும், குடும்பத்தினரின் கவனிப்பாரற்ற தன்மையும்கூட இதற்குக் காரணம்தான்'' என்றார்.

அப்சரா ரெட்டி கூறும்போது,``அந்தக் குழந்தை தற்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது; காரணம் தனக்கு நடந்த கொடுமை பற்றி அந்தக் குழந்தைக்குத் தெரியவில்லை. இது போன்ற சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும்'' என்றார். நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் கூறும்போது, ``குடியிருப்புகள் சூழ்ந்த மக்கள் இருக்கும் இடத்திலே இப்படி நடந்தால், பின் எந்த இடம்தான் பாதுகாப்பான இடம்? எங்குதான் செல்வது' என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து கணேஷ் வெங்கட்ராமன் மனைவி, நிஷா வெங்கட்ராமன் அழுகையுடனே பேசத் தொடங்கினார். அப்போது, `தனக்கும் இது போன்ற கொடுமை நிகழ்ந்துள்ளது. அந்தக் குழந்தையின் வலி என்னவென்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எனக்கு அந்தக் கொடுமை நடந்தபோது 10 வயது. அந்த வயதில் என் அம்மாவிடம் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. என் தோழிகளிடம் மட்டுமே கூறினேன். அந்தக் குழந்தைச் சந்தித்து, என் ஆறுதலைத் தெரிவிக்க வேண்டும்'' என்று உருக்கத்துடன் பேசி முடித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!