வெளியிடப்பட்ட நேரம்: 19:01 (31/07/2018)

கடைசி தொடர்பு:09:17 (01/08/2018)

``காவிரில தண்ணி வந்துடுச்சு... அதனால ஒரு லாபமும் இல்லை!’’ - கரூர் விவசாயிகளின் பிரச்னை என்ன?

கரூர் மாவட்ட காவிரியில் தண்ணீர் வெள்ளமாகப் போனாலும், அந்தத் தண்ணீரால் கரூர் மாவட்ட கரையோர கிராமங்களில் நிலத்தடி நீர் உயரப் போவதில்லை. வரும் கோடையில் கடந்த வருடம் போலவே வறட்சி ஏற்படும்.

``காவிரில தண்ணி வந்துடுச்சு... அதனால ஒரு லாபமும் இல்லை!’’ - கரூர் விவசாயிகளின் பிரச்னை என்ன?

டந்த ஐந்து வருடம் கழித்து விவசாயப் பெருங்குடி மக்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வந்திருக்கிறது காவிரி. தென்மேற்குப் பருவமழை கர்நாடகாவிலும், மேற்குத் தொடர்ச்சி மலையிலும் வெளுத்து வாங்கியதன் விளைவு காவிரியில் தாறுமாறாக தண்ணீர் ஓடுகிறது. 'காவிரியில் கொஞ்சமாவது தண்ணீர் வருமா?' என்று எல்லோரும் ஏங்கிய காலம் போய் இப்போது காவிரிக் கரையை ஒட்டி இருபுறமும் இருக்கும் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் அளவுக்குத் தண்ணீர் போகிறது. ஆனால், கரூர் மாவட்ட விவசாயிகளோ, ``ஏழெட்டு ஸ்வீட் கடைகள் வச்சுருக்கிறவருக்கு சுகர் வந்தால் எப்படி அவரால் சிறு இனிப்பைக்கூட ருசிக்க முடியாதோ, அதைபோல கரூர் மாவட்ட காவிரியில் தண்ணீர் வெள்ளமாக போனாலும், அந்தத் தண்ணீரால் கரூர் மாவட்ட கரையோரக் கிராமங்களில் நிலத்தடி நீர் உயரப் போவதில்லை. வரும் கோடையில் கடந்த வருடம் போலவே வறட்சி ஏற்படும். காரணம் கரூர் மாவட்ட காவிரியில் நடந்திருக்கும் மணல் கொள்ளைதான்" என்று கண்ணீர் வடிக்கிறார்கள்.

 காவிரி
சுப்பிரமணியன்

இதுபற்றி, நம்மிடம் பேசிய காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சுப்பிரமணியன்,  ``மத்திய அரசு, கர்நாடக அரசு, தமிழக அரசியல் கட்சிகள் யாருமே கடந்த ஐந்து வருடங்களாக தமிழக விவசாயிகளின் கண்ணீரை கண்டுக்கலை. ஆனால், அவர்களின் கண்ணீரைப் பார்த்து இயற்கையே இப்படி மழையைப் பொழிந்து, இவ்வளவு தண்ணீரை வரவைத்திருக்கிறது. ஆனால், கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு அதனால் பெரிய நன்மை இல்லை. அதற்குக் காரணம் இயற்கை இல்லை. காவிரியில் கணக்கின்றி களிமண் தெரியும் அளவுக்கு ஆளுங்கட்சியினரால் கடந்த இரண்டு வருடங்களில் நடத்தப்பட்ட மாபெரும் மணல் கொள்ளைதான்.

கரூர் மாவட்டத்தில் தொடங்கும் காவிரியில் இருந்து, திருச்சி மாவட்டம் தொடங்கும் பெட்டவாய்த்தலை வரை, அதேபோல் காவிரியின் அடுத்த கரையில் நாமக்கல் பரமத்தி தொடங்கி திருச்சி மாவட்டம் முசிறி வரை 80 கிலோமீட்டர் தூரத்துக்கு சுத்தமாக மணலை வழித்து எடுத்துவிட்டார்கள். கடம்பன்குறிச்சி, மாயனூரில் மட்டும் அனுமதி வாங்கிட்டு, தோட்டக்குறிச்சி, வாங்கல், சிந்தலவாடி, கட்டளை, நெரூர், லாலாபேட்டை, வதியம், குளித்தலைன்னு பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கரூர் மாவட்டத்தில் குவாரிகள் நடத்தி, சுத்தமாக மணலைச் சுரண்டி எடுத்துவிட்டார்கள். காவிரியின் அடுத்த கரையில் உள்ள நாமக்கல் மாவட்டத்திலும் இப்படிதான் மணலை அள்ளினார்கள். இந்த 80 கிலோமீட்டர் தூரத்துக்கு 80 சதவிகித இடங்களில் வெறும் களிமண்தான் உள்ளது. இதனால், இப்போது காவிரியில் கரைபுரண்டு தண்ணீர் போனாலும், சிமென்ட் தரையில் போகும் தண்ணீரைப்போல் இங்கே நிலத்தடியில் அதிகம் தங்காமல் நேராக ஓடிவிடும்.

 காவிரி ஆறு

1992-ம் ஆண்டிலேயே காவிரியில் மணல் அள்ளத் தொடங்கினாலும், கடந்த இரண்டு வருடங்களில்தான் அதிக அளவில் முறைகேடாக மணல் அள்ளப்பட்டிருக்கு. முன்னாடி எல்லாம் குடகில் வெள்ளம் வந்தால், 24 மணி நேரத்தில் கரூர் குளித்தலைக்கு தண்ணீர் வந்துரும். ஆனால், இப்போது குளித்தலைக்குத் தண்ணீர் வர வாரக் கணக்கு ஆகிறது. அதேபோல்,காவிரியில் வரும் புதுத்தண்ணீர் குளித்தலை அருகே உள்ள கொடியாளம் பண்ணை, நங்கவரம் பண்ணைப் பகுதிகளில் புதிதாக மணல் மேட்டை உருவாக்கிட்டுப் போயிரும். அந்த நங்கவரம் பண்ணை மணல்மேட்டுல விவசாயிகள் காய்கறிகள் பயிரிடுவாங்க. அப்படி ஒரு விளைச்சல் விளையும்.

ஆங்கிலேயர் காலத்துல ராணுவத்துக்கு உணவு தர இங்கு விளையும் காய்கறிகள்தான் கொண்டு போகப்படும். இப்போ அந்த மணல் மேட்டைக் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியலை. இப்படி காவிரியில் உள்ள மணலை ஒட்டுமொத்தமாகச் சுரண்டிவிட்டதால், நீரைத் தேக்கி வைக்கும் நீர்த்தாவரங்கள் அழிந்துவிட்டன. வேர்முடிச்சுகள் அதிகம் கொண்ட அந்த நீர்த்தாவரங்கள் காவிரி மணலில் லட்சக்கணக்கில் இருக்கும். மணலைச் சுத்தமாக அள்ளியதால் அவை அழிக்கப்பட்டுவிட்டன. அந்த நீர்த்தாவரங்கள் தண்ணீரை உறிஞ்சி வைத்துக்கொண்டு, எவ்வளவு மோசமான கோடையிலும் தண்ணீர் வழங்கும். அதேபோல், காவிரியில் முன்பு 18 அடிகள் வரை மணல் இருக்கும். தண்ணீர் வரும் காலங்களில் அந்த மணல் தனது எடையைவிட ஏழு மடங்கு அதிக அளவுக்கு தண்ணீரைச் சேமித்து வைக்கும். கோடைக்காலத்தில் அந்தத் தண்ணீரை நமக்கு வழங்கும். 

 கரூர்

அதனால்தான், வங்கோடை காலங்களிலும் காவிரி மணலில் கையால் பள்ளம் தோண்டினால்கூட பால் போல தண்ணீர் கிடைக்கும். கரையோரங்களில் தோண்டினால், ஐந்து அடி ஆழத்தில்கூட தண்ணீர் கிடைக்கும். ஆனால், கடந்த வருடம் கரையோரங்களில் கரூர் மாவட்டத்தில் 400 அடிக்கு போர் போட்டுத் தண்ணீர் எடுக்கும் அளவுக்கு, நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்துக்குப் போயிருந்தது. அதோடு, காவிரிக் கரையோரங்களில் இருந்த ஆயிரக்கணக்கான தென்னை மற்றும் பனைமரங்கள் பட்டுப்போயின. இந்த வருடம் இவ்வளவு தண்ணீர் போனாலும், ஸ்பாஞ்சாக தண்ணீரை உறிஞ்சி வைத்துக்கொள்கிற மணல் காவிரியில் இல்லாததால், பெரிய அளவில் காவிரிக் கரையோரங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயராது.

வரும் கோடைக்காலத்தில் கடந்த வருடம் போலவே காவிரியைச் சுற்றி வறட்சி நிலவும். இது ஒருபக்கம்ன்னா, கரூர் மாவட்டத்தில் இருந்து கூப்பிடு தொலைவில் உள்ள தமிழகத்தில் உள்ள பெரிய ஏரிகளின் லிஸ்டில் வரும் பஞ்சப்பட்டி, பெரியதாதாம்பாளையம் ஏரிகளில் பொட்டுத் தண்ணீர் இல்லை. காரணம் காவிரியில் உள்ள மணலை பல அடி ஆழத்துக்கு அள்ளிவிட்டதால், காவிரியில் இருந்த அந்த ஏரிகளுக்குத் தண்ணீர் பாயவில்லை. இதனால், இந்த ஏரிகளை நம்பி இருந்த 60,000 ஏக்கர் பாசன நிலங்கள் தரிசாக கிடக்கு. லாலாபேட்டை உள்ளிட்ட பல இடங்களில் மணல் அள்ளக் காவிரி கரையோரங்களில் பல மீட்டர் தூரத்துக்குப் போடப்பட்ட தற்காலிக சாலைகளை அகற்றாததால், அங்கெல்லாம் கரை வரைக்கும் தண்ணீர் வரலை. 

இவ்வளவு தண்ணீர் வந்தும் காவிரியில் நடுஆற்றில்தான் அங்கெல்லாம் தண்ணீர் போகுது. இதனாலும், அங்கெல்லாம் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பில்லை. ஆழமாக மணல் அள்ளப்பட்டதால் காவிரியின் பல கிளை வாய்க்கால்களில் தண்ணீர் ஏறிப் பாயவில்லை. இப்படி மணல் கொள்ளையால் கரூர் மாவட்டத்தில் பல பிரச்னைகள். ஆனால், இப்போதும் கரூர் மாவட்டத்தில் மாயனூர் மற்றும் சிந்தலவாடியில் மணல் குவாரியை அரசு திறந்துள்ளது. இந்த வருடம் தண்ணீர் கொண்டு வரும் கொஞ்சநஞ்ச மணலையும் இந்த மணல் குவாரிகளை காரணமாக வைத்துச் சுரண்டி அள்ளிவிடுவார்கள். அதனால் இந்தப் பாதிப்பு இன்னும் அதிகமாகும். அதனால், கரூர், நாமக்கல் மாவட்ட எல்லைகளில் காவிரியில் கைப்பிடி மணலை அள்ளக்கூட இனி அனுமதிக்கக்கூடாது. இல்லைன்னா, காவிரியால் கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லாமல் போகும் அபாயம் ஏற்படும்" என்று எச்சரித்து முடித்தார். 

இராம. சுப்ரமணியம்

அடுத்து பேசிய, ஓய்வுபெற்ற வேளாண்மை இணை இயக்குநரான இராம.சுப்பிரமணியன், ``மண்ணுக்கும் உயிர் உண்டு. காவிரி மணல்தான் கோடானகோடி நுண்ணுயிர்கள், தாவரங்கள், சிறுகுறு விலங்குகள், ஆற்றோரம் வளரும் மரங்கள், மரங்களின் அடியில் வளரும் செடிகொடிகள், அவற்றை நம்பி வரும் ஏராளமான பறவைகள், அவற்றுக்கு உணவாக வாழும் தவளைகள் மற்றும் மீன் வகைகள் போன்ற அனைத்தையும் வாழ வைக்கும் உயிராக இருந்தது. அத்தகைய பல்லுயிர் பெருக்கத்துக்கு உயிர் ஊட்டக்கூடிய கரூர் காவிரியில் மணலை அள்ளியதன் மூலம் மேலே சொன்ன அத்தகைய உயிர்களும் தாவரங்களும் கடந்த வருடம் இங்கே அழிவைச் சந்திக்க ஆரம்பித்தன.

இவ்வளவு தண்ணீர் இந்த வருடம் போனாலும்கூட, மணல் சுரண்டப்பட்டதால் அந்தப் பாதிப்புகள் தொடரத்தான் செய்யும். இந்த மணல் சுரண்டல் இன்னும் தொடர்ந்தால், இந்த நிலை இன்னும் அதிகமாகி, ஆற்றின் கரையோரங்களில் உள்ள பல ஆயிரம் கிராமங்களில் உள்ள கிணறுகள், கிளை வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் வறண்டுவிடும். நிலத்தடி நீர்மட்டம் இன்னும் கீழே போகும். ஒட்டுமொத்தமாக கரூர் மாவட்ட காவிரிக் கரையோரங்களில் பல்லுயிர்ப் பெருக்கம் தடைப்பட்டு, இங்கே இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும்" என்று அபாய மணியை அடித்து முடித்தார்.

காவிரியில் இனிமேலாவது மணல் அள்ளக் கைவைக்காதீர்கள் புண்ணியவான்களே...


டிரெண்டிங் @ விகடன்