வெளியிடப்பட்ட நேரம்: 19:02 (31/07/2018)

கடைசி தொடர்பு:19:08 (31/07/2018)

`கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது!’ - காவேரி மருத்துவமனை அறிக்கை

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நிலை சீராகி வருவதாகக் காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வயது மூப்பு காரணமாக அவர் இன்னும் சில நாள்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவ அறிக்கை

திடீர் ரத்த அழுத்தக் குறைவால் பாதிக்கப்பட்ட தி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த 28-ம் தேதி அதிகாலை சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு தரப்பினர் நேரில் சென்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்து வருகின்றனர். அந்தவகையில், இன்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். ராகுல் காந்தி, கருணாநிதியை நேரில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டது. இதனால் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். அவரின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், இன்று வெளியான அறிக்கையில் `தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது. ரத்த அழுத்தம் காரணமாக ஐ.சி.யு-வில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரை மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், கடந்த 29-ம் தேதி அவரின் உடல்நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டது. வயது மூப்பு காரணமாக அவர் உடல் நலிவுற்றிருப்பதால், மேலும் சில நாள்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டியுள்ளது. கருணாநிதி உடல்நிலை சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறது'’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.