வட சென்னை அனல்மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் 3,000 பேர் போராட்டம்!

வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 1,200 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள்                             

திருவள்ளூர் மாவட்டம் வட சென்னை அனல் மின் நிலையத்தில் 1,300 ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாள்களாகத் தமிழக அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த நான்கு வருடங்களாக ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. மேலும், அடையாள அட்டை, சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. 1,300 நிரந்தர தொழிலாளர்கள் பணி செய்ய வேண்டும். ஆனால், 60 தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்து வருகின்றனர். தற்போது மூன்று அனல் மின்நிலையத்தில் 3,000-த்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.  

இதுகுறித்து அனல் மின் நிலைய ஊழியர்கள் மாநிலத் துணைத் தலைவர் விஜயன், ``தொழிலாளர்களுக்கு எதிராக நிர்வாகம் பொய் பிரசாரம் செய்து வருகின்றது. தொழிலாளர்கள் சரிவர வேலை செய்யவில்லை என்கின்றனர். தினமும் செய்ய வேண்டிய நிரந்தரமான மின் உற்பத்தி பணிகளை ஊழியர்கள் செய்து வருகிறார்கள். பங்கரில் நிலக்கரி நிரப்ப வேண்டும். அந்தப் பணி தற்போது தடைப்பட்டுள்ளது. 640 டன் எடை கொண்டது ஒரு பங்கர். அது போல ஆறு பங்கர்கள் உள்ளன. இதன் மூலம் 1,800 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க முடியும். ஆனால், தற்போது வேலை நிறுத்தத்தால் 600 மெகா வாட் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 1,200 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க முடியாமல் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. விரைவில் அரசு பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!