வெளியிடப்பட்ட நேரம்: 19:33 (31/07/2018)

கடைசி தொடர்பு:19:33 (31/07/2018)

`கருணாநிதியின் புகைப்படம் வெளியீடு!’ - இனிப்புகளுடன் கொண்டாடிய தி.மு.க தொண்டர்கள்

கருணாநிதியை ராகுல் காந்தி சந்திந்த புகைப்படம் வெளியிடப்பட்டவுடன், காவேரி மருத்துவமனை வாயிலில் காத்திருக்கும் தொண்டர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். அவர்கள், இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து 28-ம் தேதி இரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து, தி.மு.க தொண்டர்கள் மருத்துவமனை வாயிலில் திரண்டனர். அன்றிலிருந்து தி.மு.க தொண்டர்கள், கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள மருத்துவமனையின் வாயிலில் காத்திருக்கின்றனர். இந்தநிலையில், கடந்த 29-ம் தேதி இரவு கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தொண்டர்கள் மிகுந்த வேதனையடைந்தனர்.

இந்தநிலையில், இன்று கருணாநிதியைச் சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தார். பின்னர், கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படம் வெளியிடப்பட்டது. அதில், மருத்துவ உபகரணங்களின் உதவியில்லாமல் கருணாநிதி உள்ளார். இது, கருணாநிதி நல்ல நிலையில் உள்ளார் என்பதை உணர்த்தியுள்ளது. அந்தப் புகைப்படத்தைப் பார்த்த தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். அவர்கள், இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், கருணாநிதியை ராகுல் சந்தித்த புகைப்படத்தைத் தங்கள் செல்போன்களில் காட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.